×

டீசல், பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி சென்னையில் ‘ஓலா’, ஊபர்’ கட்டணங்கள் அதிரடி உயர்வு

சென்னை: கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் ரூ.100ஐ தாண்டி ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. அதே அளவுக்கு டீசலின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால், தனியார் போக்குவரத்து வாகனங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளன. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இயங்கும் ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை வாகனங்களை இயக்கும் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்திவிட்டன. அதை தொடர்ந்து சென்னையிலும் தற்போது கட்டணத்தை உயர்த்தப் போவதாக மேற்கண்ட நிறுவனங்கள் அறிவித்து, அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.

இதுகுறித்து ஊபர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஓட்டுநர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டும், ஓட்டுநர்களின் நலனுக்காக சென்னையில் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளோம். அடுத்து வரும் வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றங்களை கண்காணித்து அதற்கேற்ப கட்டணத்தை மேலும் உயர்த்துவது குறித்து முடிவெடுப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, ஓலா வாடகை கார் நிறுவன கார்களில் சென்னையில் பயணம் செய்வோருக்கு ஒரு கி.மீட்டருக்கு ரூ.17 முதல் ரூ.20.50 வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டணம் முன்பு ரூ.15 மற்றும் ரூ.18 என்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண உயர்வுக்கு அப்பால் பார்க்கும் போது சென்னையில் இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஓட்டுநர்கள் சென்னை நகரில் மேற்கண்ட வாடகை கார்களை இயக்குவதற்கு பதிலாக கோடை விடுமுறைக்காக ஊட்டி, கொடைக்கானல் போன்ற நீண்ட தூர சுற்றுலா பகுதிகளுக்கு வாகனங்களை இயக்க சென்றுவிடுகின்றனர். அதே நேரத்தில் சென்னையில் காலை மாலை போன்ற பீக் அவர்களில் இந்த வாடகை கார்களுக்கு அதிக தேவையும் இருக்கிறது.

இந்நிலையில், மயிலாப்பூர் பகுதியில் இருந்து பெருங்களத்தூருக்கு மேற்கண்ட வாடகை கார்களில் செல்ல ரூ.1000 வரை கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் அதே நேரத்தில் அந்த கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் குளிர் சாதனத்தை பயன்படுத்த மறுக்கின்றனர். காரணம் கேட்டால், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை காட்டுகின்றனர். பெரும்பாலான ஓலா, ஊபர் கார்களில் ஏசியை போடாமல் தவிர்க்கின்றனர். விலை ஏற்றுவதற்கு முன்னதாக இதுபோன்ற வாடகை கார்களை இயக்கும் நிறுவனங்கள் பயணிகள் மற்றும் பொதுமக்களையும் கலந்து பேச வேண்டும் என்று சென்னை போக்குவரத்து அமைப்பை சேர்ந்த ராமாராவ் தெரிவிக்கிறார். இந்நிலையில், ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களில் இணையாத ஆட்டோ ஓட்டுவோரும் அதிகமாக கட்டணம் கேட்கின்றனர். அரசு நிர்ணயம் செய்துள்ள விலையைக்கூட இவர்கள் வாங்காமல் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

சிஐடியு அமைப்பின் தலைவர் பாலசுப்ரமணியன் கூறும் போது, டீசல் விலை ரூ.73 ஆக இருக்கும் போது ஆட்டோ கட்டணம் இவ்வளவு என்று நிர்ணயம் செய்தனர். இப்போது ஒரு லிட்டர் ரூ.100க்கு உயர்ந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளபடி தற்போதைய விலை ஏற்றத்துக்கு ஏற்ப ஆட்டோவுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தாமல் உள்ளது. அதனால், அரசிடம் நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம், தனி நபர்கள் தங்கள்  இஷ்டம் போல விலை ஏற்றுவதை தடுக்க ஒரு மொபைல் ஆப்பை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில், சென்னை நகரில் இயக்கப்படும் பெரும்பாலான பயணிகளை ஏற்றிச் செல்லும்  வாகனங்கள் தங்கள் இஷ்டம் போல கட்டணங்களை உயர்த்தியுள்ளன. இந்த கட்டணத்தை பொதுமக்கள் கட்டாயம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : Ola ,Uber ,Chennai , Echo of diesel and petrol price hike 'Ola' and Uber fares in Chennai
× RELATED ஊரை சுற்றிக் காட்டுவதாக கூறி மனநலம்...