×

நிலம் வாங்கி கொடுப்பதாக நடிகர் சூரியிடம் ரூ.2.90 கோடி மோசடி செய்த விவகாரம் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மீது வழக்கு பதிவு: கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் திட்டம்

சென்னை: வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சூரி. இவர் பெரிய அளவில் நிலங்கள் வாங்க முடிவு செய்துள்ளார். அதுகுறித்து தனது நண்பரான நடிகர் விஷ்ணுவிடம் கூறியுள்ளார். அதற்கு விஷ்ணு தனது தந்தையான முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மூலம் இடம் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். அதன்படி நடிகர் சூரி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடலாலா மூலம் ரூ.2.90 கோடியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி நடிகர் சூரிக்கு நிலம் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நிலத்திற்கு செல்ல வழியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனக்கு அந்த நிலம் வேண்டாம் என்று சூரி கூறியுள்ளார். உடனே, வேறு ஒரு இடத்தில் நிலம் வாங்கி தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால் சொன்னபடி சூரிக்கு நிலம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அவர் பணத்தை திருப்பி கேட்டபோது, ரூ.1.30 கோடிக்கு மேல் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மீதம் ரூ.1.40 கோடி பணத்தை இருவரும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகர் சூரி அடையார் காவல் நிலையத்தில் ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் மீது புகார் அளித்தார்.
 
பிறகு நடிகர் சூரி தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார். அதைதொடர்ந்து உயர் நீதிமன்றம் இந்த வழக்கை அடையார் காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் சூரி துணை கமிஷனர் மீனா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். பண வரவு, அதற்கான கணக்குகள் குறித்து கேள்விகளுக்கு சூரி முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 9 மணி நேர விசாரணைக்கு மேலும் சில ஆவணங்களை சமர்பிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதேநேரம், நடிகர் சூரி நிலம் வாங்க கொடுத்த மொத்த பணத்தில், பாதி பணம் ரொக்கமாக வழங்கியதாக கூறப்படுகிறது. மீதமுள்ள பணம் சினிமா படம் நடித்த சம்பளத்தில் கழித்துள்ளாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும், நடிகர் சூரியிடம் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் பணம் பெற்றது பல்வேறு ஆவணங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் மீது ஐபிசி 406 ,420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் பணம் மோசடி வழக்கில் எப்போது வேண்டுமானாலும் இருவரும் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும், முன்னாள் டிஜிபி என்பதால் அவரை கைது செய்யும் போது, வலுவான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. இதனால் பண மோசடி தொடர்பாக நடிகர் சூரியிடம் கேட்கப்பட்டுள்ள முக்கிய ஆவணங்கள் கையில் கிடைத்த பின் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளரை அன்புவேல் ராஜை நேரில் அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DGP ,Ramesh Kudawala ,Suri , Former DGP Ramesh Kudawala charged with defrauding actor Suri of Rs 2.90 crore for buying land: Central Crime Branch police plan to arrest him
× RELATED மேற்குவங்க மாநில டிஜிபியை இடமாற்றம்...