×

இரண்டாம் திருமணம் செய்யும் அரசு பணியாளர் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: மனித வள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் அனைத்து அரசு செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: அரசு அலுவலகங்களில் குடிமைப்பணிகள் மற்றும் பணியிடங்களில் நியமனம் செய்யப்படும் அரசுப் பணியாளர்கள், அவர்கள் பணியிலிருப்பினும், விடுப்பிலிருப்பினும் அல்லது அயற்பணியில் இருப்பினும் தமிழ்நாடு 1973ம் ஆண்டு அரசுப்பணியாளர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களாவர். கணவன், மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் செல்லுபடியாகாது. அவர்கள் தண்டனைக்குட்பட்டவர்கள்.

சட்டத்துக்கு புறம்பான, ஒழுக்கக்கோடான எச்செயலிலும் ஈடுபடக்கூடாது. அரசுப்பணியாளரின் ஓய்வு அல்லது இறப்பிற்கு பின்னரே இத்தகைய இருதுணை மணம் குறித்து அலுவலகத் தலைமைக்கு தெரிய வருகிறது. இது அரசுப்பணியாளரின் சட்டப்படியான வாழ்க்கைத் துணைக்கு அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பயன்களை அளிப்பதில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எனவே, தொடர்புடைய விதிகளை துறைத் தலைமை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசுப் பணியாளர் சட்டப்படி திருமணம் செய்துகொண்ட வாழ்க்கைத் துணைவரின் நலனை காத்திடவும், அனைத்து தலைமைச் செயலகத்துறைகள் மற்றும் துறைத் தலைமைகளுக்கு பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

அரசுப் பணியாளரின் குடும்ப விவரங்களை படிவம் 3ல் பெறுவதுடன், முறையான சரிபார்ப்பினை மேற்கொள்வதன் வாயிலாக அதன் உண்மைத் தன்மையை உறுதிசெய்த பின்னர் அதன் விவரங்களை அரசுப்பணியாளரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அரசுப்பணியாளர்கள் பணியில் சேரும்போது அல்லது திருமணத்திற்கு பின்னர் அல்லது புதிதாக அரசுப்பணியாளரால் செய்யப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னர், அதனை பணிப்பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும். இவற்றில் ஏதேனும் ஐயம் எழுமாயின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முடிவு செய்ய வேண்டும்.

அரசுப்பணியாளரது இருதுணை மணம் அல்லது வேறு தவறான நடத்தை கண்டறியப்படுவதன் பேரில் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மற்றொரு திருமணம் புரிந்த குற்றத்திற்காக, 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 198ம் பிரிவில் அடங்கியுள்ள விதிகளின்படி அதிகார எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் அத்தகைய அரசுப்பணியாளர் குற்றவியல் வழக்கு தொடர்வதற்கு உட்படுத்தப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Departmental Disciplinary Action against Second Married Civil Servant: Government of Tamil Nadu Warning
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...