×

புத்தகம் படிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

மருத்துவர் மகேஷ்வரன் நாச்சிமுத்து

‘‘குடும்பத்தில் நான்கு பேர் சம்பாதிப்பதால், என் ஒருவனது சம்பளம் முழுக்க மக்களுக்காக செலவிடுகிறேன்” என்கிறார் மருத்துவர் மகேஷ்வரன் நாச்சிமுத்து. மலைகளின் அரசி நீலகிரியின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் மகேஷ்வரன் 1995 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்துள்ளார். பயிற்சியினை மருத்துவ சேவையே இல்லாத, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆரம்பித்தவர் இன்று வரை அம்மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருவதோடு, தனது மருத்துவமனையிலேயே நூலகம் ஒன்றினையும் அமைத்துள்ளார்.

‘‘அம்மாவும் மருத்துவர் என்பதால் சொந்த மருத்துவமனை இருந்தது. என்னுடைய சம்பாத்தியம் கம்மியாக இருந்தாலும் வீட்டுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாத சூழல். படிப்பை முடித்த நேரத்தில், இந்திரா காந்தி ஆட்சில் ஆரம்பிக்கப்பட்ட JSS திட்டத்தினை கோவையில் அவிநாசி லிங்கம் அவர்களது இடத்தில் இலவசமாக நடத்தப்பட்டது. அதாவது JSS என்பது பழங்குடி மக்கள், நகரங்களில் இருக்கும் குடிசைப் பகுதி மக்கள் போன்றவர்களுக்கு சிறு தொழில் கற்றுக்கொடுத்து அவர்கள் வீட்டிலேயே இருந்தபடி செய்வதற்கு வழி வகை செய்வது. அதன் இயக்குனராக மருத்துவர் பாலசுப்பிரமணியம் இருந்தார்.

அவர் மூலமாக பழங்குடி மக்களின் கிராமங்களில் சின்னச் சின்ன நூலகம் மாதிரி வைக்கலாம் என்று முடிவெடுத்து, வருடம் நான்கு நூலகம் என்ற கணக்கில் ஐந்து வருடங்களில் ரூ.10,000 மதிப்புள்ள புத்தகங்கள், அதை பராமரிக்க அலமாரிகளும் வாங்கி கொடுக்கப்பட்டது. அவ்வாறு அன்று தொடங்கியதுதான், இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் மருத்துவமனையை விரிவுபடுத்தும் போது மேல் மாடியில் ஒரு நூலகம் அமைவதற்கு காரணம். தற்போது அதில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் இருக்கும். உண்மையை சொல்லணும்னா பெரிய நகரத்தில் ஆரம்பித்திருந்தால் மக்கள் இந்த புத்தகங்களை படித்து பயன் அடைந்திருப்பார்கள். ஆனால் மேட்டுப்பாளையத்தில் மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் புத்தகம் குறித்த விழிப்புணர்வு இல்லை.

அவர்களிடம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க இன்றும் போராடிக் கொண்டு இருக்கேன். அதற்காக நானே பல திட்டங்களை செயல்படுத்தினேன். மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களை நூலகத்திற்கு அழைத்து வர சொல்லி ஆசிரியர்களிடம் கேட்டேன். இதன் மூலம் அவர்களுக்கு புத்தகங்களை அறிமுகம் செய்யலாம் என்று. ஆனால் யாரும் முன் வரவில்லை. எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் நானே கொஞ்சம் புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பள்ளிகளாக கொண்டு போய் கொடுத்தேன். ஒரு மாதம் கழித்து வேறு புத்தகங்களை கொடுத்து, ஏற்கனவே அங்கு கொடுத்த புத்தகங்களை வேறு பள்ளிக்கு கொடுப்பேன். போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்கள் கொஞ்சம் பேர் வந்து படிக்கிறாங்க. அதில் இருவர் வேலையிலும் சேர்ந்துவிட்டனர். இன்னும் அதிகமானோருக்கு புத்தகம் படிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு போய் சேர வேண்டுமென்பதுதான் ஆசை.

இது போக கோவை மாவட்டத்திலேயே இருளர் சமூகத்தை சேர்ந்த காளியம்மாள் என்கிற பெண் சட்டம் படித்து முதல் வழக்கறிஞராக வரப் போறாங்க. அவர்கள் இருக்கும் கோப்பனேரியில் ஆறு பேர் பட்டதாரிகளாக வந்திருக்காங்க. அதற்கு காரணம் அங்குள்ள நூலகம்’’ என்று கூறும் மருத்துவர் மகேஷ்வரன், கேரள வெள்ளம், கஜா புயல், தற்போது கொரோனா தொற்று போன்ற நேரங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருந்துகளையும் விநியோகம் செய்துள்ளார். “இந்த கொரோனா தொற்றில் பல பழங்குடி கிராமங்களுக்கு மருந்துகளோ, மருத்துவ ஆய்வுகளோ செல்லவில்லை. எனவே முறையாக அரசிடம் அனுமதி வாங்கி அந்த இடங்களில் இலவச முகாம்கள் நடத்தினோம்.

நம் நாட்டில் முதல் முடக்கம் அறிவிக்கப்பட்ட போது எங்கள் மருத்துவமனையை எப்போது வேண்டுமானாலும் அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னோம்.  மேட்டுப்பாளையம் முனிசிபல் ஆபீஸில் வேலை பார்க்கும் துப்புரவு தொழிலாளர்களுக்காக மருத்துவ முகாம் போட்ட போது தான் அவர்களின் ஆரோக்கியம் குறித்த உண்மை தெரியவந்தது. அங்குள்ள ஐம்பது சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இது அவர்களுக்கு தெரியவே இல்லை. இது போல் ஒவ்வொரு இடங்களிலும் நடத்தினால் அவர்கள் உடல் பிரச்னை என்ன என்பது தெரிய வரும்” என்று கூறும் மகேஷ்வரன் நாச்சிமுத்து சூழலியலிலும் ஆர்வம் கொண்டவர். வரும் காலங்களில் தன்னிடம் இருக்கும் எண்ணற்ற ஆவணப்படங்களை மாணவர்களுக்கு திரையிட்டு காட்டுவதோடு புத்தக வாசிப்பினையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இவர்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED பசுமைப் போராளி…வான்காரி மாத்தாய்