விவசாயிகள் உற்பத்தி பொருட்களை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் விற்பனை செய்ய கோரிக்கை

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டாரத்தில் சுமார் 500 ஏக்கரில் பாகற்காய், தட்டைப் பயிறு, மேரக்காய் பயிரிடப்பட்டு வருகின்றன. இவை கேரளா மற்றும் கூடலூர் பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. விவசாயிகள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக கூடலூர் பகுதியில் பாடந்துறை, புத்தூர்வயல், மண்வயல், புளியம்பாறை, விவசாயிகளை ஒருங்கிணைத்து 2021ம் ஆண்டு முதுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டது.

வேளாண்மை விற்பனை துறை வழிகாட்டுதலின்படி, முதுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த மாதம் கூடலூர் பகுதியில் உள்ள விவசாயிகளை கோவை, பொள்ளாச்சி பகுதியில் உள்ள பந்தல் சாகுபடி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை நேரடியாக சந்திக்க வைத்து விளைபொருட்களை  சந்தைப் படுத்துவது பற்றி ஒருநாள் கண்டுணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் இருந்து முதுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களான  ராஜேஷ் குமார், ரகுநாதன் ஆகியோர் நிர்வாக அலுவலர் ஒத்துழைப்போடு தினசரி சராசரியாக 2 முதல் 3 டன் காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து  விற்பனை செய்து வருகின்றனர். கூடலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய விளை பொருட்களை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செயதால் உரிய விலை  கிடைப்பதோடு, லாபமானது பங்குதாரரான விவசாயிகளுக்கு கிடைக்கும். எனவே, அனைத்து விவசாயிகளும் முதுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு

தந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: