×

பட்டாசு ஆலை வெடி விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்யும் நோக்கோடு பல்வேறு தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், பட்டாசு தொழிற்சாலைகளின் மீது கவனம் செலுத்தாதன் காரணமாக அங்கே அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் அரவிந்தசாமி என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளதாக செய்தி வந்துள்ளது ஆற்றொணா துயரத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்.

பட்டாசு தொழிற்சாலைகளில் பெரும்பாலான விபத்துகள் மருந்து கலவையின்போதுதான் ஏற்படுகிறது.  இதுபோன்ற விபத்தினை தடுக்க தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தை சேர்ந்த பொறியாளர்கள் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை சென்று, மருந்து கலவை மேற்கொள்ளும் பணி தகுதி வாய்ந்தவர் முன்னிலையில் நடைபெறுகிறதா என்பதையும், அந்த பணியின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். ஆனால் செய்யப்படுவதாக தெரியவில்லை. அதனால்தான் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, பட்டாசுத் தொழிற்சாலைகளில் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த முனைப்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என கூறினார்.

Tags : OPS , ops, crackers factory, burst
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி