×

பிரெஞ்ச் ஓபனில் நிச்சயம் ஆடுவேன்: ரஃபேல் நடால் பேட்டி

மாட்ரிட்: விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், 4 வார காலம் சிகிச்சை எடுத்துக் கொண்டார். காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ‘வரும் பிரெஞ்ச் ஓபனில் நிச்சயம் ஆடுவேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், இந்த ஆண்டு ஆஸி. ஓபனில் ஆடவர் ஒற்றையரில் பட்டத்தை வென்றதன் மூலம், 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்ற மைல் கல்லை எட்டி, புதிய சாதனை படைத்தார்.

இதில் அவர் பிரெஞ்ச் ஓபனில் மட்டுமே 13 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச்சில் நடந்த இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியின் போது, விலா எலும்பில் காயம் ஏற்பட்டதால், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சிடம் தோல்வியடைந்தார். ‘காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள எனக்கு 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். எனவே குறைந்தது 4 வாரங்கள் நான் போட்டிகளில் ஆடப்போவதில்லை’ என்று அப்போது அவர் அறிவித்தார்.

இந்நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ள நடால், மீண்டும் பயிற்சிகளை துவக்கினார். கடந்த 3 தினங்களாக அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘லேசான உடற்பயிற்சிகளை துவக்கியுள்ளேன். 2 நாட்களுக்கு லேசான பயிற்சிகள்தான். இருப்பினும் டென்னிஸ் மைதானத்தில் மீண்டும் காலடி எடுத்து வைத்தது, பரவசமாக உள்ளது. வரும் பிரெஞ்ச் ஓபனில் நிச்சயம் ஆடுவேன்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags : French Open ,Rafael Nadal , Will definitely play in the French Open: Interview with Rafael Nadal
× RELATED ஆஸி. ஓபன் டென்னிஸ் காயத்தால் விலகினார் நடால்