×

கேரளாவுக்கு ஆற்று மணல் கடத்தல் விவகாரம்: கனிம வளத்துறை பெண் அதிகாரியிடம் சிபிசிஐடி 3 நாள் கிடுக்கிப்பிடி

நெல்லை: எம்.சாண்ட் உரிமம் பெற்று கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்திய வழக்கில் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சபியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், நேற்று நெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக அதே பகுதியை ேசர்ந்த கிருஷ்டி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பொட்டல் கிராமத்தில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்ட பிஷப்க்கு சொந்தமான இடத்தில் எம் சாண்ட் குவாரிக்கு உரிமம் பெற்றுவிட்டு, ஆற்று மணல் அள்ளி அனுமதியின்றி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவ்வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. ஆகவே இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் சேரன்மகாதேவி சப் கலெக்டர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அந்த பகுதியில் சேரன்மகாதேவி அப்போதைய சப்-கலெக்டர் பிரதீப் தயாள் ஆய்வு செய்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவிலான ஆற்றுமணல் கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கடத்தியதை கண்டுபிடித்தார்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.9.50 கோடி அபராதம் விதித்தார். மேலும் துறை ரீதியாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சப் கலெக்டர் உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரித்து கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்ட பிஷப் சாமுவேல் மாரி ஏரேனியஸ் (69), பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல் (56), ஷாஜிதாமஸ் (58), ஜீஜோ ஜேம்ஸ் ( 37), ஜோஸ் சமகால (69), ஜோஸ் கலவியாஸ் (53) ஆகிய 6 பேரை கைது செய்தனர். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் அப்போதைய நெல்லை கனிமவளத்துறை உதவி இயக்குனராக இருந்த சபியா மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கடந்த 10ம் தேதி அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சபியாவை போலீஸ் காவலில் விசாரிக்க நெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இதைதொடர்ந்து கடந்த 18ம் தேதி சிபிசிஐடி போலீசார் சபியாவை போலீஸ் காவலில் எடுத்து நேற்று வரை ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து அவரை போலீசார் நெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர். கனிமவளத்துறை உதவி பெண் அதிகாரியிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய இடத்தில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் சிபிசிஐடி போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் முக்கிய புள்ளிகள், அரசு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Kerala ,CBCID ,Mineral Resources , River sand smuggling case to Kerala: CBCID arrests 3-day-old female mineral resources officer
× RELATED சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான...