சிவகாசி தாலுகா அலுவலகத்தில் மாடிக்கு செல்ல திண்டாடும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள்: அலுவலகத்தை கீழ் தளத்திற்கு மாற்ற கோரிக்கை

சிவகாசி: சிவகாசி தாலுகா அலுவலகத்தில் மாடியில் உள்ள வட்ட வழங்கல் பிரிவிற்கு செல்ல மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பெரும் சிரமம் அடைகின்றனர்.சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்றுப்புற வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய நிலையில் சிவகாசி தாலுகா அலுவலகம் இயங்கி வருகின்றது. ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய கார்டு கேட்டு விண்ணப்பித்தல், சாதி சான்றிதழ், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமானோர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.தாலுகா அலுவலகத்தின் மாடியில் வட்ட வழங்கல் பிரிவு இயங்கி வருகின்றது. வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பிரிவில்தான் ஸ்மார்ட் ரேஷன் கார்டின் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த வட்ட வழங்கல் பிரிவு மாடியில் உள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இவர்கள் மாடியில் ஏறி இறங்கும் போது சிரமப்படுகின்றனர். யாராவது ஒருவர் கையை பிடித்து அழைத்து சென்றால் மட்டுமே முதியவர்களால் மாடிக்கு செல்ல முடிகின்றது. பெண்கள் குழந்தைகள் வைத்துக்கொண்டு மாடிப்படிகள் ஏறி இறங்க சிரமம் அடைகின்றனர். வட்ட வழங்கல் பிரிவை கீழ் தளத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: