×

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்து.: தலைமறைவாக இருந்த ஆலையின் மேலாளர் கைது

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக மேலாளர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பர்மா காலனியில் தங்க பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

இந்த ஆலையில் நேற்று வழக்கம் போல் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். பகல் 12 மணிக்கு எதிர்பாராத வகையில் அந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்ட ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. அதில் பணியாற்றி வந்த பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த அரவிந்தன் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். அதனையடுத்து கருகிய நிலையில் கிடந்த வாலிபர் அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த வெடிவிபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று தங்களது விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த ஆலையின் மேலாளர் தலைமறைவானார்.

அதனைத்தொடர்ந்து நேற்று உயிரிழந்த அரவிந்தன் குடும்பத்துக்கு அரசு சார்பாக ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ஆலையின் மேலாளர் ராஜேஸ்வரன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Sivakasi , Explosion at a firecracker factory near Sivakasi: The manager of the factory who was in hiding was arrested
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து