×

கோஹ்லிக்கு ஓய்வு தேவை... ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

மும்பை: ‘நிறைய விளையாடி விட்ட கோஹ்லி இன்னும் ஆறேழு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும்  என்றால், இடையில்  கட்டாயம் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும்’ என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்குப் பிறகு சாதனை நாயகனாக விஸ்வரூபம் எடுத்த விராத் கோஹ்லி (33), தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வந்தாலும், சமீபத்திய ஆட்டங்களில் துரதிர்ஷ்டவசமாக பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் சதம் அடித்தே 2 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. கேப்டன் பொறுப்பை துறந்துவிட்ட பிறகாவது பதவி அழுத்தம், நெருக்கடி இல்லாமல் அதிரடியாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில்  அப்படி எதுவும் நிகழவில்லை. இதுவரை 7 லீக் ஆட்டங்களில் விளையாடி 2ல் மட்டுமே 40 ரன்களை கடந்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோஹ்லியின் நலம் விரும்பியும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, ‘நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். கோஹ்லி மிக அதிகமாக உழைத்துள்ளார். யாருக்காவது ஓய்வு தேவை என்றால்... அது கட்டாயம் கோஹ்லிக்குதான். அது ஒன்றரை மாதமோ, 2 மாதமோ... ஜூலையில் இங்கிலாந்து செல்வதற்கு முன்போ, அதற்கு பிறகோ அவருக்கு கட்டாயம் ஓய்வு தேவை. ஏன் என்றால் அவர் இன்னும் ஆறேழு ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டியுள்ளது. போதிய ஓய்வு எடுக்கவில்லை என்றால் கஷ்டம்தான். நான் பயிற்சியாளராக இருந்தபோது அவரிடம் சொல்லி இருக்கிறேன். சக வீரர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். கெடுபிடி காட்டக்கூடாது. அதனால் எதிர் விளைவுகள் வரும், கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

Tags : Kohli ,Ravi Shastri , Kohli needs rest ... Ravi Shastri insists
× RELATED டி20 உலக கோப்பையில் விராட் கோஹ்லி நீக்கமா?: முன்னாள் வீரர்கள் காட்டம்