கதையை நம்புவதால் தென்னிந்திய சினிமா ஜெயிக்கிறது: சஞ்சய் தத் புகழாரம்

மும்பை: கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். தொடர்ந்து தென்னிந்திய படங்கள் இந்தியில் ‘டப்’ ஆகி வெற்றி பெறுவதை பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்: தென்னிந்திய படங்களில் ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த ஹீரோயிசத்தை பாலிவுட் மறந்து பல காலம் ஆகிவிட்டது. அதற்காக காதல் கதை படங்கள், சீரியஸ் சப்ஜெக்ட் படங்கள் வேண்டாம் என நான் கூறவில்லை. அதே சமயம், அவ்வப்போது ஹீரோயிசத்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான் மாநில ரசிகர்களையும் மனதில் வைத்து படங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நமது இந்தி படங்கள் மும்பை, டெல்லியுடன் மற்ற மாநிலங்களிலும் ஓடும்.

மேலும் தென்னிந்திய படங்களின் கதையை முழுமையாக பேப்பரில் எழுதிக்கொண்டு படப்பிடிப்புக்கு வருகிறார்கள். அவர்கள் கதையை நம்புகிறார்கள். இந்தி படத்துக்கான வரவு-செலவு கணக்குகள் மட்டும்தான் பேப்பரில் எழுதப்படுகிறது. இந்த நிலையெல்லாம் மாற வேண்டும். இயக்குனர் ராஜமவுலி நினைப்பதை எடுக்கிறார் என்றால், அவருக்கு அதுபோல் சுதந்திரம் தரும் தயாரிப்பாளர்கள் கிடைக்கிறார்கள். பாலிவுட்டில் குல்ஷன் ராய், ஜி.பி.சிப்பி, யஷ் சோப்ரா, யஷ் ஜோஹர், சுபாஷ் கய் என இயக்குனரை மதிக்கும் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. இவ்வாறு சஞ்சய் தத் கூறினார்.

Related Stories: