×

மொழி பிரச்னையில் வழக்கம் போல அதிமுகவின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது: ஓபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: மொழிப் பிரச்னையில் வழக்கம் போல அதிமுகவின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என ஓபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை:
மொழிப் பிரச்னையில் வழக்கம் போல அதிமுக மேற்கொள்ளும் இரட்டை வேடம் இப்போது வெட்ட வெளிச்சமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு விட்டதும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கழகத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்தி மொழிக்கு அதிமுக பட்டுக் கம்பளம் விரித்த வரலாறுகளை எல்லாம் மூடி மறைக்க முயற்சித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் தலைமையிலான நல்லாட்சியில் தான் தமிழ்நாட்டில் உள்ள 117 கோயில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள் செவ்வனே நடைபெறவும், ஏறத்தாழ ரூ.664 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கோயில்களுக்கு பணிகள் சிறப்பாக நடைபெறவும் ஆணைகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதோடு, இந்து அறநிலையத் துறை உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏறத்தாழ ரூ.2600 கோடி மதிப்பீட்டிலான கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டிருக்கிறது. இந்த நற்செயலை நடுநிலை உணர்வு கொண்ட நல்ல உள்ளங்களும், நாளேடுகளும் நாளும் பாராட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் அனுதினமும் பார்க்கின்ற ஓபிஎஸ் இப்போது ‘கோயில்களை திமுக அரசு இடிக்கின்றது’ என்ற பச்சைப் பொய்யை பரப்ப முற்பட்டு அறிக்கை வெளியிட்டு இருப்பது விரக்தியின் வெளிப்பாடாகும்.

சங்கம் வளர்த்த மதுரை மாநகரில், தமிழன்னைக்கு 100 கோடி ரூபாய் செலவில் சிலை அமைத்து சிறப்பு செய்யப்படும் என அறிவித்து விட்டு, அதற்காக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் இறுதியில் அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டு தமிழன்னையை அவமதித்தது அதிமுக அரசு என்பதையும், அந்த அரசில் தான் பத்தாண்டு காலமாக நிதி நிலை அறிக்கையினை ஓபிஎஸ் படித்து வந்திருக்கின்றார் என்பதனையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

பேரறிஞர் அண்ணாவினால் அறிவிக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்டு, தமிழ் ஆராய்ச்சிக்கென்றே அமைக்கப்பட்டுள்ள உயர் அமைப்பான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே இந்தி மொழி கற்றுத்தரப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்ட அதிமுக அரசில்தான் ஓபிஎஸ் அமைச்சராக இடம் பெற்றிருந்தார் என்பதை மறுக்க முடியுமா? பரிதிமாற்கலைஞர் கண்ட கனவை நனவாக்கி முத்தமிழறிஞர் கலைஞரின் தளராத முயற்சியால் தமிழன்னையின் மகுடத்தில் ஒளி வீசும் மாணிக்கமாக வீற்றிருக்கும் செம்மொழி என்ற தகைமையை அந்த சொல்லைக்கூட பத்தாண்டு கால தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் இடம்பெறாது பார்த்துக்கொண்ட அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கான சாதனைகள் என பட்டியல் போட முனைந்திருப்பதுதான் வேடிக்கையானது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Gold South ,OBS , Language problem, AIADMK, dual role, OPS, Gold South
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...