×

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் ஸ்ரீசுசில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது, பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், டெல்லியில் இருந்த சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீதான புகார்கள் தொடர்பாக 8 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவற்றின்கீழ் தனித்தனியாக கைது செய்யப்பட்டார். இந்த 8 வழக்குகளில் 6 வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களிலும், முதலில் கைதான வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் பெற்றார்.

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில்  ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலில் பதிவு செய்த வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 7 வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை. ஜாமீன் நிராகரிப்பிற்கான வழக்கமான காரணங்களே கூறப்படுகிறது. கைதான பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு கைது என சிபிசிஐடி செயல்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் ஆதாரங்களை கலைப்பார், சாட்சிகளை மிரட்டுவார், மாயமாகிவிடுவார் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். அவரது பாஸ்போர்ட்டை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தார்.

Tags : Sivasankar Baba , Sivasankar Baba, sexual harassment of students Conditional bail, High Court
× RELATED சிவசங்கர் பாபாவிற்கு எதிராக பாலியல்...