×

ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் ஆன்லைன் மூலம் ஒரு வாரத்தில் 4,797 பேர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு: முதல்வர் தொடங்கி வைத்த ஒரு வாரத்தில் மக்களிடம் அமோக வரவேற்பு

சென்னை: முதல்வர் தொடங்கி வைத்த ஒரு வாரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் 4,797 பேர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாறுதல் செய்துள்ளனர். இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் அமோகமாக வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக போக்குவரத்து துறையின் கீழ் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்ய பல நாட்கள் வரிசையில் நின்று மாற்றம் செய்து வந்தனர். இதை தங்களுக்கு சாதகமாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் பணம் பெற்று கொண்டு பணிகளை முடிந்து வந்தனர்.

அதேநேரம், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால், அலுவலகம் செல்வோர் ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை இருந்தது. அதேபோல் வெளிநாடுகளில் உள்ளோர் நேரடியாக வந்து புதுப்பிக்கும் நிலை காணப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் நாள்கணக்கில் வரிசையில் நின்று உரிமம் புதுப்பிக்கும் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நேரடியாக வருவதை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களின் சுமைகளை குறைக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பழகுனர் உரிமம் பெறுவது, உரிமம் புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இடைத்தரகர்களின் பிரச்னைக்கு முடிவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 12ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பொதுமக்கள் செல்லாமல் ஆன்லைன் மூலம் அனைத்து உரிமங்களும் பெறும் வகையில் https://parivahan.gov.in என்ற இணையதளம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து எளிமையான முறையில் ஆன்லைன் மூலம் இந்த பணிகள் மக்களுக்கு எளிதாக கிடைக்க போக்குவரத்து ஆணையர் நடராஜன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால், இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் குறிப்பாக கடந்த 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரடியாக செல்லாமல் பழகுநர் உரிமத்தை பெறுதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் அர்வம் காட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 40 விழுக்காட்டினர் தங்களது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து ஆன்லைன் மூலம் தங்களது உரிமங்களை புதுப்பித்தும், முகவரி மாற்றியும், பழகுநர் உரிமத்தை பெற்றுள்ளனர். முதல்வர் தொடங்கி வைத்த இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் சில மணி நிமிடங்களில் பணிகள் முடிந்துவிடுவதாகவும் பயனடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் இடைத்தரகர்கள் மற்றும் புரோக்கள் இன்றி பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் பயனடைவார்கள் என்று போக்குவரத்து உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : RTO ,Chief Minister , RTO Office, Online, Apprentice License, Driving License Renewal, CM,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...