மோடிக்கு ராகுல் அறிவுரை வெறுப்புணர்வு புல்டோசர்கள் வீடுகளில் விளக்கேற்ற உதவாது

புதுடெல்லி: ‘பாஜ.வின் வெறுப்புணர்வு அரசியலால் தெருக்களில் தீ பற்றி எரிகிறது. இது வீடுகளில் மின் விளக்கை ஏற்ற உதவாது,’ என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் டெல்லியில் சமீபத்தில் ராமநவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது  கலவரம் ஏற்பட்டது. அந்த பகுதிகளில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகளை அந்தந்த மாநில அரசுகள் புல்டோசர் மூலம் இடித்து வருகின்றன. இதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே போல் நிலக்கரி தட்டுப்பாட்டால், இந்த ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மின் வெட்டு பிரச்னை இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘நாட்டில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால் விரைவில் மின்வெட்டு அமலாகலாம்  என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மோடி ஜி அவர்களே, நீங்கள் பெருமிதத்துடன் பேசிக்கொள்ளும் 8 ஆண்டு ஆட்சியில் தற்போது 8 நாட்களுக்கே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மின் வெட்டினால் சிறு தொழிற்கூடங்கள் பாதிக்கப்பட்டு ஏராளமானோருக்கு பணி இழப்பு ஏற்பு நேரிடும். எனவே, வெறுப்புணர்வை விதைக்கும் புல்டோசர்களை  சுவிட்ச் ஆப் செய்து விட்டு, மின்சார நிலையங்களை சுவிட்ச் ஆன் செய்யுங்கள். பாஜ.வின் வெறுப்பு அரசியலால் தெருக்களில் தீ பற்றி எரிகிறது. இது வீடுகளில் மின் விளக்கை ஏற்ற உதவாது,’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: