இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் 2 குழந்தைகளுடன் தாய் தனுஷ்கோடிக்கு வருகை: இதுவரை வந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

ராமேஸ்வரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், அங்கு உணவு பொருட்கள், எரிபொருள், கட்டுமானம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தமிழ் மக்கள் மீண்டும் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி அகதிகளாக வரும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த மார்ச் 21ம் தேதி இரவு, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியிலுள்ள நான்காம் மணல் திட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கஜேந்திரன், மனைவி மேரி கிளாரின், 4 மாத கைக்குழந்தை உட்பட 6 பேர் படகில் இறக்கி விடப்பட்டனர்.

தொடர்ந்து மறுநாள் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் வருகை தந்தனர். இவர்கள் 16 பேரும் உரிய விசாரணைக்கு பின் மண்டபம் முகாமில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஏப்.7ம் தேதி தலைமன்னாரை சேர்ந்த அந்தோணி நிசாந்த், மனைவி, 2 பிள்ளைகளுடன் தனுஷ்கோடி வந்திறங்கினார். தொடர்ந்து, ஏப்.9ம் தேதி இலங்கை திரிகோணமலையை சேர்ந்த நிரோசன் (28), இவரது மனைவி சுதா (34) உட்பட 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர், மற்றொரு படகில் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (38), இவரது மனைவி சுசிகலா (32) உட்பட 9 பேர் படகில் வந்திறங்கினர். அவர்கள் 19 பேரும் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன்பிறகு, இலங்கையில் இருந்து தமிழகம் வருபவர்களை நடுவழியில் கடற்படையினர் கைது செய்வதால் வருகை நின்றது. இந்நிலையில், இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த வர்ஷினி (37) தனது மகள் நைனிகா (11), மகன் ரங்கீசன் (4) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவில் தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து படகில் புறப்பட்டு, நேற்று அதிகாலை ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்திறங்கினார். தகவலறிந்து சென்ற ராமேஸ்வரம் போலீசார், வர்ஷினியிடம் விசாரணை செய்தனர். பின்னர் மூவரையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். கடந்த மார்ச் 21ம் தேதி முதல் நேற்று வரை 42 பேர் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: