×

உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி காலாவதி ஆயுதங்களை சப்ளை செய்யும் ‘நேட்டோ’ - ஐ.நா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி பகீர் தகவல்

கீவ்: உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி காலாவதி ஆயுதங்களை நேட்டோ நாடுகள் சப்ளை செய்து வருவதாக ஐ.நா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்து 55 நாட்கள் நிறைவடைந்த நிலையில், கிழக்கு உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர், கீவ் நகரில் மீண்டும் தாக்குதலை நடத்த ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் மரியுபோல் ரஷ்யாவின் கட்டுக்குள் வந்துவிடும் என  ஐரோப்பிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் உக்ரைனுக்கு  பீரங்கிகளை வழங்க உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில்  நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று  ஜெர்மன் அதிபர் கூறினார். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ‘ரஷ்யாவின் போர் உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில், பணவீக்கத்திற்கான மிகப் பெரிய காரணம் ரஷ்யாதான்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் போரால் உலகம் முழுவதும் எரிவாயு விலைகள் மற்றும் உணவு விலைகள் உயர்ந்துள்ளன’ என்றார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், ‘கிழக்கு உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை தொடங்கி உள்ளன. என்ன விலை கொடுத்தேனும், எதிர்தாக்குதல் நடத்தப்போகிறோம்’ என்றார். இந்நிலையில்  ஐ.நாவுக்கான ரஷ்ய துணை நிரந்தரப் பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ், உக்ரைனில் நடந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், ‘மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து வருகின்றன.

ஆனால் அவையனைத்தும் காலாவதியான ராணுவ உபகரணங்கள். அவற்றை ரஷ்யப் படைகள் எளிதாக அழித்துவிடும். நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதாக உறுதியளிக்கும் அதேவேளையில், அவற்றை அழிக்கும் சக்தியை ரஷ்யா கொண்டுள்ளது. புத்தம் புதிய தளவாடங்களை சப்ளை செய்வதாக நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம், ரஷ்யப் படைகள் அழித்துவிடும். அசோவ்ஸ்டல் ஆலையை ைகப்பற்றிய நிலையில், அங்கு தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள் மக்களை பிணைக் கைதியாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். அந்த ஆலையை கைப்பற்றி ஒருமாதமான நிலையில் இப்போது ஏன் குறிப்பிடுகின்றனர்?’ என்றார்.

Tags : NATO ,Russia ,Ukraine ,UN , NATO supplies expired weapons to Ukraine - Russia's envoy to UN
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...