×

சித்திரை விஷு பூஜை: சபரிமலையில் 8 நாட்களில் ரூ10.15 கோடி வருமானம்

திருவனந்தபுரம்; சபரிமலை ஐயப்பன் கோயிலில் சித்திரை விஷு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டிருந்த 8 நாட்களில் ரூ10.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 10ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (11ம் தேதி) முதல் 18ம் தேதி வரை 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் குறைந்ததால் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் நடத்தினர். நிலக்கல்லில் உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டிருந்தது. இதனால் இந்த நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன் மூலம் கோயில் வருமானமும் அதிகரித்தது. நடை திறக்கப்பட்டிருந்த 8 நாட்களில் மொத்தம் ரூ10.15 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. சித்திரை விஷு தினத்தன்று காணிக்கை மூலமாக மட்டும் ரூ4.38 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.

கொரோனாவுக்கு முன்பு மண்டல, மகரவிளக்கு சீசனில் மட்டுமே ஒரேநாளில் ரூ1 கோடிக்கு மேல் காணிக்கை வருமானம் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அரவணை பிரசாதம் விற்பனை மூலம் ரூ3.68 கோடியும், அப்பம் விற்பனை மூலம் 67 லட்சமும் கிடைத்துள்ளது. இதேபோல சபரிமலையில் கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கும் இம்முறை கூடுதல் வருமானம் வந்துள்ளது. பம்பை-நிலக்கல் இடையே நடத்தப்பட்ட பஸ் போக்குவரத்து மூலம் மட்டும் ரூ1.03 கோடி கிடைத்துள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு மண்டல, மகரவிளக்கு காலம் தவிர மாத பூஜைகளின் போது இந்த அளவுக்கு வருமானம் கிடைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Chithirai Vishu Puja ,Sabarimala , Chithirai Vishu Puja: Rs 10.15 crore revenue in 8 days in Sabarimala
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு