நெல்லை: நெல்லை மாவட்டம் காருகுறிச்சியில் கோடைகாலத்தை ஒட்டி பலவித வடிவங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் காருகுறிச்சி கிராமம் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்புக்கு புகழ் பெற்றது. தாமிரபரணி நதிக்கரையில் கிடைக்கப்பெறும் மண்ணால் இந்த பொருட்கள் உருவாக்கப்படுவது தனிச்சிறப்பு. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு அகல்விளக்கு, கைவிளக்கு உள்ளிட்ட விளக்கு வகைகளும், விநாயக சதூர்த்தி காலங்களில் விநாயகர் சிலை, சுவாமி சிலை உள்ளிட்டவைகளும், நவராத்திரி காலத்தில் கொலு பொம்மைகளும் விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலங்களில் மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில், ஜாடி, தேநீர் குவளை, தயிர் கிண்ணம், டம்டர் குடம், மண் ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பலவிதமான மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சமூக வலைத்தளங்கள் மூலம் அமோகமாக வியாபாரம் நடைபெறுவதாக கூறும் மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.