மலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

மலேசியாவில், ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் முக்கியமான உணவுப் பொருளான கயா, இப்போது நம் சென்னையிலேயே கிடைக்கிறது. தேங்காய்ப்பால், முட்டை, இனிப்பு சேர்க்கப்பட்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. இதை ஜாம் போல ப்ரெட் வகைகளுடனும், நம் இட்லி தோசைகளுடனும் கூட சேர்த்து சாப்பிடலாம். சத்ய ஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜனின் மனைவி தஷா சுப்பிரமணியம், மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். அவரது அம்மா திறமையான சமையல்காரர். மலேசியாவில் புகழ்பெற்ற உணவகத்தை உருவாக்கி நிர்வகித்தும் வருகிறார். ‘‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், எனது வீட்டில் கயா ஜாம் எப்போதும் இருக்கும். என் அம்மாவும், பல மணி நேரம் செலவு செய்து எங்களுக்குப் பிடித்த கயாவை வீட்டிலேயே தயார் செய்வார்” என்று தஷா புன்னகைக்கிறார்.

இப்போது ஊரடங்கு சமயத்தில், மலேசியா செல்ல முடியாது. ஆறு மாதமாக, அம்மாவையும், அவர் சமையலையும் மிஸ் செய்த தஷா வீட்டிலேயே மலேசிய கயாவை செய்து பார்க்க முடிவு செய்தார். இந்த ஜாமை, தஷாவின் மகள் ருசி பார்த்து ஓகே சொல்ல, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்கியுள்ளார். விரைவிலேயே அனைவரும் தஷாவின் கயாவைக் கேட்டு அவருக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பித்ததும், ‘ட்ரூலி கயா’ லாக்டவுன் தொழிலாக உருவாகியது.

வணிகரீதியாக தயாரிக்கப்படும் ஜாம்கள், ஒரு வருடத்திற்கு மேல் காலாவதியாகாமல் இருக்கப் பதப்படுத்தப்படுகின்றன. ஆனால் கயா, தஷாவின் சமையலறையிலிருந்து மூன்று விதமான சுவைகளில் நேரடியாக  நமக்குக் கிடைக்கிறது.

க்ளாசிக் கயா - தேங்காய்ப்பால், சர்க்கரை, முட்டை சேர்க்கப்பட்டு தயாராகிறது. வீகன் கயா - முட்டையைத் தவிர்த்து, தேங்காய்ப்பால், நாட்டு சர்க்கரை பூசணி, கடைசியாக ரம்பை இலை எனப்படும் மலேசியாவின் பண்டன் இலைகளின் சாறுகளிலிருந்து பண்டன் கிரீன் கயா தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் கயாவின் அடிப்படை உணவுப்பொருள். அதன் நன்மைகள் நாம் அறிந்ததே. ஆனால், ரம்பை இலைகளும், பல நன்மைகளுடன் உடலுக்கு அழகும் ஆரோக்கியமும் அளிக்கிறது. இதன் சாறு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடலில், நுரையீரலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. சிறந்த வலி நிவாரணியாகவும், நரம்புகளுக்கு வலு சேர்க்கிறது. ‘‘ஜாமில் முட்டை கலந்திருந்தால் மக்கள் விரும்புவார்களா என்ற தயக்கமும், மலேசிய ருசி நம் சென்னைவாசிகளை கவருமா என்ற தயக்கமும் ஆரம்பத்தில் இருந்தது. மக்கள் இப்போது விதவிதமான உணவு வகைகளைத் தேடிப்போய் முயற்சி செய்கின்றனர்.

பலரும் மலேசியா, சிங்கப்பூர் எனச் சுற்றுலா செல்கிறார்கள்.  நிச்சயம் கயா ஜாமை முயற்சி செய்திருக்க வாய்ப்பு இருக்கு. அதனால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன்தான் ஆரம்பித்தேன். சில வாரங்களிலேயே, நல்ல வரவேற்பு கிடைத்தது. வயதானவர்கள் கூட கயாவை விரும்பி வாங்குறாங்க. ஒரு முறை டிரை செய்து பார்க்கலாம்னு வாங்குறாங்க. சுவை பிடித்திட மறுபடியும் ஆர்டர் செய்றாங்க. வீட்டில் இயற்கையான ஆரோக்கியமான முறையில் தயாரிப்பதால், வாடிக்கையாளர்களின் ஆர்டருக்கு ஏற்பத்தான் தயார் செய்றேன். அடுத்த கட்டமாக சர்க்கரையில்லாத ஜாமை தயாரிக்க திட்டமிட்டு இருக்கேன்” என்றார். தற்போது இன்ஸ்டாவில் மட்டுமே விற்கப்பட்டு வரும் கயா, விரைவிலேயே பல்பொருள் அங்காடிகளிலும் வரவுள்ளது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Related Stories:

>