×

குடமுழுக்கு நடக்கும்வரை காத்திருக்காமல் பொலிவிழந்த கோயில்களை புதுப்பிக்க வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அறிவிப்பு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை: இந்து சமய  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில கோயில்களில் 12 ஆண்டுகள் முடிவடைந்தும் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்படாமல் கோயில்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அதே சமயம் குடமுழுக்கு செய்து சில ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட கோயில்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மராமத்து பணிகள் மேற்கொள்ளதாத காரணங்களினால் பொலிவிழந்து காணப்படுகிறது.

குடமுழுக்கு முடிவடைந்து 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருப்பணி மேற்கொள்ளப்படாத கோயில்களுக்கு விரைந்து திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில் குடமுழுக்கு முடிவடைந்து சில ஆண்டுகள் கடந்த நிலையிலோ, திருவிழாக்களின் போது பொலிவிழந்து காணப்பட்டால் (விமானம், கோபுரம் முதலியன நீங்கலாக ) பாலாலயம் செய்ய தேவையில்லாத கோயிலின் முன் மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் போன்றவைகள், மடப்பள்ளி, மதில் சுவர், சுற்றுச்சுவர், பிரகார தரைதளம்  ஆகியவைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பழுதுபார்த்து புதுப்பித்தல் மற்றும் இதர முக்கிய பணிகளாக இரும்பு கதவுகளுக்கு வர்ணம் தீட்டுதல், சிதைவுற்ற பகுதிகளை சரிசெய்தல், மர கதவுகளை பழமை மாறாமல் புதுப்பித்தல் போன்ற பணிகளை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மண்டலத்திலும் இதுவரை குடமுழுக்கு செய்யப்படாத மற்றும் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு முடிவடைந்த நிலையில் தற்போது பொலிவிழந்து காணப்படும் கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகளை தற்போதுள்ள துறைவிதிகளின்படி தொல்லியல் கருத்துரு பெற்று மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழுக்களின் பரிசீலனைக்கு வைத்து இக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள உடன் மதிப்பீடுகள் தயார் செய்து பணிகள் துவங்கப்பட வேண்டும் என அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.

இப்பணிகளை குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது கோயில் பொலிவிழந்து காணப்பட்டாலோ குடமுழுக்கு 12 ஆண்டுகள் முடிவடைய வேண்டும் என காத்திருக்காமல் உடனடியாக  மேற்கொள்ள வேண்டும் கால இடைவெளி என்பதனை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என வரையறுக்கப்படுகிறது என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags : Kudamulukku, Polivilan, The Temple, Renovation, Commissioner
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...