வண்ணாரப்பேட்டையில் கோஷ்டி தகராறில் ரவுடிக்கு சரமாரி வெட்டு: 6 பேர் கைது

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் நேற்று தியேட்டரில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு ரவுடிக்கு சரமாரி கத்தி வெட்டு விழுந்தது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு 6 பேரை கைது செய்தனர். சென்னை கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் ரவுடி தர்மா (24). இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் வண்ணாரப்பேட்டையில் ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றிருந்தார். படம் பார்த்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விக்கி என்பவருக்கும் ரவுடி தர்மாவுக்கும் இடையே கோஷ்டி தகராறு வெடித்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் விக்கியின் நண்பர்கள் தியேட்டர் வாசலில் ரவுடி தர்மாவை தாக்க கத்தியுடன் தயார்நிலையில் நின்றிருந்தனர். படம் முடிந்து தனது நண்பர்களுடன் ரவுடி தர்மா வெளியே வந்துள்ளார். அவரை விக்கியின் நண்பர்கள் சுற்றி வளைத்து, உருட்டுக் கட்டையால் சரமாரி தாக்கினர். பின்னர் கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் ரவுடி தர்மாவுக்கு வயிறு, வலது கை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்து, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று நள்ளிரவு கோஷ்டி மோதலில் ரவுடி தர்மாவை தாக்கிய 6 பேரை கைது செய்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையை சேர்ந்த லோகநாதன் (22), பிஷப் லைனை சேர்ந்த நெல்சன் (19), ராயபுரம், மாடசாமி தெருவை சேர்ந்த கணபதி (22),

கொருக்குப்பேட்டை, ரங்கநாதபுரம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஆகாஷ் (18), பாலமுருகன் (18) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: