மாதவரம் நீதிமன்றத்தில் கத்தியுடன் நுழைந்த வாலிபருக்கு வலை

திருவொற்றியூர்: மாதவரம் நீதிமன்றத்துக்குள் நேற்று கத்தியுடன் நுழைந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாத்தூர், எம்எம்டிஏ பிரதான சாலையை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (39). தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனி ஊழியர். இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் நண்பருடன் மது அருந்தியுள்ளார். இவருக்கு அருகே மது அருந்திய 3 பேர் வாய்த்தகராறில் ஈடுபட்டு, பீர்பாட்டிலை எடுத்து உடைத்துள்ளனர். இதை விக்னேஸ்வரன் தட்டிக் கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமான 3 பேரும் அவரை கத்தியால் கிழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இப்புகாரின்பேரில் மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாத்தூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (22), மகேஷ் (23), லோகநாதன் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்றிரவு மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளே அழைத்து சென்றனர்.

அப்போது, வாசலில் நின்றிருந்த ஒரு மர்ம நபர் கத்தியுடன் நீதிமன்ற வளாகத்துக்குள் 3 பேரை நோக்கி ஓடிவந்திருக்கிறார்.

இதை பார்த்ததும் 3 பேரும் மாஜிஸ்திரேட் இருக்கை அருகே பதுங்க முயற்சித்தனர். அங்கு துப்பாக்கியுடன் காவலுக்கு நின்றிருந்த ஒரு காவலர், அந்த வாலிபரிடம் கத்தியை கீழே போடு. இல்லையேல் சுட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதை கேட்டதும் அந்த மர்ம வாலிபர் கத்தியுடன் தப்பி ஓடிவிட்டார். மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் கத்தியுடன் நுழைந்த மர்ம வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: