×

புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடியை கொலை செய்தது ஏன்?.. கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் ஒரு ரவுடி கொலை வழக்கில் நேற்று 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், ரவுடியை கொன்றது ஏன் என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை தண்டையார்பேட்டை, தண்டையார் நகரை சேர்ந்தவர் ஜீவன்குமார் (26). பிரபல ரவுடி. இவர்மீது ராயபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், எண்ணூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் துவண்ணாரப்பேட்டை, தியாகி பெருமாள் சாலை தெரு சந்திப்பில் ரவுடி ஜீவன்குமார் நடந்து சென்றிருக்கிறார். அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரவுடி ஜீவன்குமாரை வழிமறித்தனர். பின்னர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அக்கும்பல் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் ரவுடி ஜீவன்குமார் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர்.

அங்கு படுகாயம் அடைந்த ஜீவன்குமாரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே ரவுடி ஜீவன்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனம், ராயபுரம் உதவி ஆணையர் உக்கிரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, ரவுடி கொலை குறித்து விசாரித்தனர். மேலும், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து, ரவுடியை கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

 இந்நிலையில், நேற்று காசிமேடு, எர்ணாவூர் பகுதியில் பதுங்கியிருந்த எர்ணாவூர் தாளங்குப்பத்தை சேர்ந்த கார்த்திக் (எ) புள்ள கார்த்திக் (26), புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த நரேஷ்குமார் (22), ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்த ஹரிஷ் (எ) விக்கி (23), இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்த ஜானகிராமன் (23), செர்பியன் நகரைச் சேர்ந்த நசுருல்லா (23), நாகூரான் தோட்டத்தை சேர்ந்த பவசன் (21), சிவன் நகரை சேர்ந்த திவ்யா (எ) சந்தோஷ் (21) ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் புதுவண்ணாரப்பேட்டை  சேர்ந்த அதிமுக நிர்வாகி சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை ரவுடி ஜீவன்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார். அதன்பிறகு அப்பகுதி வாலிபர்களின் செல்போனை பறித்து சென்று வந்திருக்கிறார். இதனால் அவரை பழிவாங்க காத்திருந்தோம். அவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து வெளிவந்ததும் கண்காணித்தோம். சம்பவ தினத்தன்று தனியாக வந்த ரவுடி ஜீவன்குமாரை பட்டாக்கத்தியால் வெட்டி கொலை செய்தோம் என கைதான 7 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Rowdy ,Puthuvannarapettai , Why was Rowdy killed in Puthuvannarapettai?
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...