திருச்சி அருகே பயங்கரம்: முதியவரை அடித்து கொன்று கிணற்றில் வீசிய பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது

தா.பேட்டை: திருச்சி மாவட்டம் தா.பேட்டை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (62). ஆடுகள் மேய்க்க சென்ற இவர் 17ம் தேதி அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று தா.பேட்டை புதிய பஸ் நிலையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 16 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.

இருவரும், சரவணனை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிந்தது. அந்த சிறுவர்கள் அங்குள்ள பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். சிறுவர்கள் கடந்த 16ம் தேதி கிணற்றில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் நெசவாளர் காலனி சரவணன் வீடு வழியாக சென்றபோது அவரது வீட்டு வாசலில் ஈர துணிகளை பிழிந்துள்ளதாக தெரிகிறது. இதனை சரவணன் கண்டித்த போது, சிறுவர்களுக்கும், சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டதால் அப்பகுதியில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர்.

பின்பு ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக வயலுக்கு சென்ற சரவணனுக்கும், அங்கு நின்று கொண்டிருந்த சிறுவர்களுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முதியவர் சிறுவர்களின் பெற்றோர்களிடம் சொல்லி விடுவதாக கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், தடியால் சரவணனை சரமாரியாக தாக்கினர். தலையில் பலமாக தாக்கியதில் இறந்து விட்டார். பின்னர் முதியவர் உடலை, இருவரும் அப்பகுதியில் உள்ள கிணற்றுக்குள் தூக்கி வீசி உள்ளனர். 2 சிறுவர்களையும் திருச்சியில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Related Stories: