அகிலாண்டேஸ்வரி கோயில் தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் நிறைவு-வஸ்திரங்கள் அம்மனுக்கு அனுப்பி வைப்பு

திருச்சி : திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதத்தை நேற்றிரவு நிறைவு செய்தார்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சமயபுரம் மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமல் சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைப்பார் என்பது ஐதீகம்.

இந்நாட்களில் அம்மனுக்கு அபிஷேகங்கள், நைவேத்தியங்கள் செய்யமாட்டார்கள். அம்மனுக்கு தூள்மாவு, இளநீர், பானகம் ஆகியவை மட்டுமே படைக்கப்படும். சித்திரைத் தேர்த்திருவிழாவையெட்டி அம்மன் தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தன்று இரவு அம்மன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை நிறைவு செய்வார்.

இதற்காக மாரியம்மனின் சகோதரியாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்து ஏராளமான அபிஷேக திரவியங்கள், பட்டுவஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர்சாதம், காய்கறிக்கூட்டு ஆகியவை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு படைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு சமயபுரம் கோவில் தேரோட்டம் நேற்று காலை தொடங்கி மதியம் வரை நடந்தது. மாலை 8 மணியளவில் திருவானைக்காவல் கோவிலில் இருந்து அபிஷேக திரவியங்கள், பட்டுவஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர்சாதம், காய்கறிக்கூட்டு மற்றும் தோசை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கோவில் பேஸ்கார் ஜெம்பு தலைமையில் அர்ச்சகர்கள். கோயில் ஊழியர்கள் மேளதாளங்கள் முழங்க. இரவு 11 மணியளவில் சமயபுரம் சென்றடைந்தனர்.

இந்த தளிகை மற்றும் சீர்வரிசை சமயபுரம் வந்தபின் அம்பாள் தேர்த்தட்டிலிருந்து இறங்கி கோயிலுக்குள் சென்று அங்கு அபிஷேக அலங்காரம் கண்டருளினார். பின்னர் தளிகை நிவேதத்துடன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை நிறைவு செய்தார்.

Related Stories: