×

கடமலைக்குண்டு பகுதியில் எலுமிச்சை அறுவடை தீவிரம் -நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு : கடமலைக்குண்டு பகுதியில் எலுமிச்சம் பழம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. வியாபாரிகள் நல்ல விலைக்கு கொள்முதல் செய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, பாலூத்து, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை, நரியூத்து, தும்மக்குண்டு, காந்தி கிராமம், அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக எலுமிச்சம் பழங்களை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை வெயில் கொளுத்துவதால், குளிர்பானங்களுக்கு எலுமிச்சம் பழங்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால், மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும், கடமலைக்குண்டு, வருசநாடு பகுதிகளுக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தை ரூ.120 முதல் 150 வரை கொள்முதல் செய்கின்றனர். ஆண்டிபட்டி, தேனி, மதுரை, திண்டுக்கல், சின்னமனூர், கம்பம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் தினசரி வந்து கொள்முதல் செய்கின்றனர்.

 இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இது குறித்து விவசாயி பிரபாகரன் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் எலுமிச்சம் பழம் பறிக்கும் பணி நடந்து வருகிறது.நல்ல விலை கிடைத்தாலும் மகசூல் இல்லை. எலுமிச்சம் பழத்துக்கு டிமாண்ட் அதிகரித்து வருவதால், இன்னும் சில நாட்களில் எலுமிச்சம் பழம் விலை மேலும் அதிகரிக்கும். இதனால், எலுமிச்சை சாகுபடி செய்த விவசாயிகள் உரம், மருந்து வைத்து சாகுபடியை பாதுகாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்’ என்றார்.


Tags : Katamalaikundu , Varusanadu: Harvesting of lemons is in full swing in Kadamalaikundu area. Merchants buy at good prices
× RELATED கடமலைக்குண்டு அருகே மழைக்கு ஒழுகும் அரசு பள்ளி: மாணவ-மாணவிகள் அவதி