வேலூர் மாவட்டத்தில் ஆட்டோக்களுக்கு போலீசார் வழங்கும் விழிப்புணர்வு ஸ்டிக்கருக்கு பணம் தேவையில்லை-எஸ்பி தகவல்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த போலீசார் ஆட்டோக்களுக்கு வழங்கும் விழிப்புணர்வு ஸ்டிக்கருக்கு பணம் தேவையில்லை என்று எஸ்பி ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். வேலூர் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த பெண் டாக்டர், அவரது ஆண் நண்பருடன் சினிமா பார்த்துவிட்டு, காட்பாடியில் இருந்து வேலூர் திரும்பினர். அப்போது, சவாரி ஏற்றுவது போல் நடித்து, பெண் டாக்டரை 4 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து 4 பேரை போலீசார் கைது செய்து, தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், உரிய ஆவணங்களுடன் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதா? என்று போலீசார் ஆய்வு செய்து, உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோக்களை, சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு வரவழைத்து, ஆட்டோ உரிமையாளர்களின் விவரங்கள் பெற்று, ஆட்டோ பதிவு எண், முகவரி, செல்போன் எண் போன்றவற்றை பெற்றுக்கொண்டனர்.

பின்னர், அந்த ஆட்டோ டிரைவரின் செல்போன் எண், ஆட்டோ உரிமையாளரின் பெயர் செல்போன் எண்ணுடன் கூடிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோக்களுக்கு போலீசார் வழங்கினர். இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கருக்கு காட்பாடி போலீசார் ₹80 வரையில் பணம் பெறுவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் புகார்கள் எழுந்தது. இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கருக்கு பணம் வழங்க தேவையில்லை என்று எஸ்பி தெரிவித்தார்.

இதுகுறித்து வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் கூறுகையில், ‘ஆட்டோக்களை வரைமுறைபடுத்த போலீசார் ஆய்வு செய்து, வழங்கும் விழிப்புணர்வு ஸ்டிக்கருக்கு பணம் கொடுக்க தேவையில்லை. அப்படி பணம் கேட்டால், ஆட்டோ டிரைவர்கள் என்னிடம் புகார்கள் தரலாம்’ என்றார்.

ஆட்டோக்கள் ஆய்வு 100 சதவீதம் முடியவில்லை

வேலூர் மாவட்டத்தில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆட்டோக்களை, போலீசார் 100 சதவீதம் ஆய்வு செய்து, ஆட்டோ உரிமையாளர்களின் விவரங்கள் வாங்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. உரிய வாகன பதிவு எண் உள்ள ஆட்டோக்களுக்கு மட்டுமே விவரங்கள் பெறப்பட்டு, ஆட்டோ உரிமையாளர்களின் விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

இதில், பதிவு செய்யப்படாமல் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் தற்போது மாநகரில் உலா வந்து கொண்டிருப்பதால், குற்றங்கள் தொடர வாய்ப்புள்ளது. போக்குவரத்து நெரிசலும் குறைந்தபாடில்லை. எனவே ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: