×

புதுச்சேரியில் கஞ்சா பயன்படுத்துவோர் மீது வழக்கு-ஐஜி சந்திரன் கடும் எச்சரிக்கை

புதுச்சேரி :  புதுச்சேரியில் இனிமேல் 5 கிராம் என்ற குறைந்த அளவில் கஞ்சா வைத்திருந்தாலும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை ஐஜி சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  புதுவையில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடம் கஞ்சா பழக்கம் தொடர்ந்து  அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி தலைமையில்  போதைப்பொருள் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும்  நாளுக்குநாள் கஞ்சா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 இதுவரை கஞ்சா  விற்பனை செய்பவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.  இனிமேல் கஞ்சா வாங்குவோரும் கைது செய்யப்படுவார்கள், கஞ்சா வைத்திருந்தாலோ,  குறைவான அளவு அதாவது 5 கிராம், பத்து கிராம் அளவுக்கு வைத்திருந்தாலும்,  கஞ்சா புகைத்தாலும், அதனை எந்த வடிவில் பயன்படுத்தினாலும் அவர்கள் கைது  செய்யப்படுவார்கள்.
எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள்,  அவர்களின் நண்பர்கள் யார்  யாருடன் பழகுகிறார்கள் என்பதை எல்லாம்  கண்காணிக்க வேண்டும்.

நல்ல சமுதாயம் உருவாக பெற்றோர்களுக்கும்  விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒரு பள்ளி மாணவன் கஞ்சா வைத்திருந்து கைது  செய்யப்பட்டால் அவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுவான்.கல்லூரி  மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும். இதற்காக  பள்ளி, கல்லூரி அளவில் போதைப்பொருள் தடுப்பு குழுக்களை ஏற்படுத்த  உள்ளோம். இதில் ஆசிரியர்கள், நல்ல பழக்கவழக்கம் உள்ள மாணவர்கள் அடங்கிய  குழு கஞ்சா பயன்பாட்டை கண்காணிக்கும். பொதுமக்கள் தங்கள்  பகுதிகளில் கஞ்சா விற்பனை, புழக்கம் குறித்து தகவல்களை புதுச்சேரி  காவல்துறையின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறைக்கு 112 என்ற எண்ணுக்கும்,  பிரத்யேக வாட்ஸ்அப் எண் 9489205039  என்ற எண்ணுக்கு தகவல்களை அனுப்பலாம்.  2016ல்  புதுச்சேரியில் 3  கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2021ம் ஆண்டு 129  வழக்குகளாக அதிகரித்துள்ளது.

கஞ்சா விற்பனை செய்வோர் மீது  குண்டர்  சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 550 கிராம் என்ற அளவில் இருந்த  கஞ்சா பறிமுதல் தற்போது 109 கிலோவாக அதிகரித்துள்ளது.  கஞ்சா  வழக்குகளில் குற்றவாளிக்கு 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும். ஆரம்பத்தில் கஞ்சா பரிசோதனைக்காக ஐதராபாத்  ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. தற்போது கிருமாம்பாக்கத்தில்   உள்ள காவல்துறை தடயவியல் சோதனை மையம் பரிசோதனை  செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுப்பதற்காகவும்  2 தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் முகநூல்,  வாட்ஸ் அப், ஏடிஎம் பின் நம்பர், கார்டு நம்பர், கார்டு சிவிவி, ஓடிபி  உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என  காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : IG Chandran ,Pondicherry , Puducherry: Police have registered a case against IG Chandran for possessing less than 5 grams of cannabis in Puducherry.
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...