×

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வளாகத்தில் 1.21 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு சட்டவிரோத கட்டிடங்கள் : அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் அம்பலம்!!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வளாகத்தில் உரிய சுற்றுசூழல் அனுமதியின்றி 1.21 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் அம்பலம் ஆகி உள்ளது. சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை அமைந்துள்ள இடம் மற்றும் அதனை சுற்றிய வனப்பகுதி, காப்புக் காடு எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவே தற்போது வரை நீடிக்கிறது. இதனால் ஆளுநர் மாளிகை வளாகத்தில் 1980ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பகுதியில் 1980 முதல் தற்போது வரை 6 புதிய கட்டுமான திட்டங்களை மேற்கொண்டு இருப்பதாக ஆளுநர் மாளிகையே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது. கடைசியாக 2013ம் ஆண்டு ஆளுநர் மாளிகை ஊழியர் குடியிருப்பின் ஏ முதல் எல் வரையிலான 12 தொகுப்புகள் 78 ஆயிரத்து 217 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் 6 கட்டுமானங்களும் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2013ம் ஆண்டு ஊழியர் குடியிருப்பு கட்டுமானப் பணிக்காக காப்புக் காட்டின் குறிப்பிட்ட பகுதியை சாதாரண வனப்பகுதியாக வகை மாற்றுவது செய்வது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் அப்போதைய அதிகாரிகள், மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினாலும் இதில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கட்டுமானம் மேற்கொள்ளப்படும் இடம் அல்லது ஆளுநர் மாளிகையின் கட்டுப்பாட்டில் உள்ள 146 ஏக்கர் காப்புக் காடு வனப்பரப்பையும் சாதாரண வனப்பரப்பாக வகை மாற்றும் செய்வதற்கான பரிந்துரையை வழங்கும்படி தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் மாளிகையிடம் கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான பரிந்துரை வழங்கப்படாததால் காப்புக் காடாகவே நீடிக்கும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுற்றுசூழல் அனுமதியின்றி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது விதிமீறல் என்று குற்றச் சாட்டு எழுந்துள்ளது. கிண்டி காப்புக் காடு வனப்பரப்பு 1978ம் ஆண்டுக்கு பின் இதுவரை எந்த வகை மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu Governor's House ,RTI , Tamil Nadu, Governor, House, Illegal, Buildings
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...