×

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா: பந்தலடியில் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி!!!

கூவாகம்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பந்தலடியில் திருநங்கைகள் தாலி அறுத்த பின்னர் ஒப்பாரி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. தமிழகத்தில் திருநங்கைகளுக்காக நடைபெறும் ஒரே திருவிழா கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் இந்த திருவிழாவானது நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இத்திருவிழாவானது நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் தமிழக அரசு தளர்வை நீக்கிய நிலையில் மீண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

18 நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் 7 கிராமங்களைச் சேர்ந்த திருநங்கைகள் இதனை நடத்துவார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக, விழுப்புரம், சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலம், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்த திருநங்கைகள் ஏராளமானோர் பங்கு பெற்றனர். இந்த திருவிழாவின் போது மிஸ் வாக் அழகிப் போட்டியும் நடைபெற்றது. மேலும், நேற்றைய தினம் திருநங்கைகள் அரவானை கணவனாக நினைத்து தாலி காட்டும் நிகழ்வு நடைபெற்றது. தாலி காட்டும் நிகழ்வு முடிந்தவுடன், அன்றைய தினம் அங்கேயே, கற்பூரம் ஏற்றி, கும்மியடித்து, ஆடிப்பாடி இரவு முழுவதும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

பின்னர், இன்றைய தினம் தேரோட்டமானது முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும். இன்று காலை 7 கிராமங்களை சேர்ந்த திருவிழாவை நடத்தும் குழுவினர், அரவானின் பாகங்களை தனித்தனியாக கொண்டுவந்து, பின்னர் அதனை பொருத்தி, இறுதியாக அரவானின் உருவம் பெறப்படும். தேரோட்டம் தொடங்கியவுடன், திருநங்கைகள் கற்பூரம் ஏந்தி, ஆடிப்பாடி கொண்டாடுவர். பின்பு, பந்தலடி பகுதியில் மணக்கோலத்தில் இருக்கும் திருநங்கைகள் தாலி அறுத்து, விதவை கோலத்தில் ஒப்பாரி வைத்து அழுவர். பின்பு வெள்ளைப்புடவை கட்டிக்கொண்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வர்.     


Tags : Chithirai Festival ,Koovagam Kuttandavar Temple ,Bandaladi , Koovagam, Kuttandavar Temple, Chithirai Festival, Bandaladi, Transgender, Oppari
× RELATED வீரபாண்டி சித்திரை திருவிழாவில் ...