பிரசாந்த் கிஷோருடன் 3வது முறையாக சோனியா தொடர் ஆலோசனை

புதுடெல்லி: 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியை பலப்படுத்துவதற்கான வியூகங்கள் அமைப்பது தொடர்பாக பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3வது நாளாக நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். சமீபத்தில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த நிலையில், கட்சியில் தேவையான மாற்றங்களை செய்யப் போவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். அதன்படி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் அதற்கு முன்பாக நடக்க உள்ள பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் கட்சி தலைமை ஆலோசனை கேட்டது.

அப்போது, பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி அவற்றை அமல்படுத்துவது தொடர்பாக ஒருவாரத்தில் முடிவை தெரிவிக்க காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைக்கவும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பை தொடர்ந்து கட்சித் தலைவர் சோனியா காந்தி, நேற்று முன்தினம் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியிடமும் கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 நாளில் 3வது நாளாக நேற்று மீண்டும் பிரசாந்த் கிஷோருடன் சோனியகா காந்தி ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல் நாத், அம்பிகா சோனி, வேணு கோபால், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதில் மக்களவை தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேர இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சோனியாவுடனான அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரும் நாட்களில் காங்கிரசில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: