×

தொடை தெரிய லுங்கி கட்டியதை தட்டிக்கேட்டதால் சேலம் சிறையில் வார்டனை தாக்கிய கோவை குண்டாஸ் கைதிகள்: 2 பேர் மீது வழக்கு 10 ரவுடிகளையும் தனிமைப்படுத்தினர்

சேலம்: சேலம் மத்திய சிறையில் வார்டனை தாக்கிய 2 குண்டர் தடுப்பு கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் 10 ரவுடிகளை தனிமைப்படுத்தியுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வசதி படைத்த மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபடும் கைதிகள் சிலர் செல்போன் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து சிறை சோதனை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில கோவை மத்திய சிறையில் 2 ரவுடி கோஷ்டியினர் இருந்ததால் இருதரப்பினரும் மோதிக்கொள்ளலாம் என்ற நிலையில் ரவுடிகள் அமர்நாத், சிவா(எ)பாபு உள்பட 10 குண்டாஸ் கைதிகளை கடந்த டிசம்பர் மாதம் சேலத்திற்கு மாற்றினர். இவர்களும் சேலம் சிறையில் ரவுடித்தனம் செய்ததோடு செல்போனையும் பயன்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கோஷ்டியிடம் இருந்து செல்போன் ஒன்றை சிறை சோதனை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  மாலை சோதனை குழு வார்டன் கார்த்திக், சிறையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரவுடிகள் அமர்நாத்,  சிவா ஆகியோர் தொடை தெரியும் வகையில் லுங்கியை ஏற்றி கட்டிக்கொண்டு மிரட்டும் வகையில் நின்றிருந்தனர். இதனை பார்த்த வார்டன் கார்த்திக், லுங்கியை இறக்கிக் கட்டுமாறு கூறியுள்ளார். அப்போது ரவுடிகள் இருவரும் சேர்ந்து வார்டனை கடுமையாக தாக்கினர். மேலும் பல்துலக்கும் பிரஷால் முதுகில் சரமாரி குத்தியுள்ளனர்.

வலி தாங்க முடியாமல் கதறிய வார்டனின் சத்தத்தை கேட்டு சக வார்டன்கள் ஓடிவந்தனர். இதனால் 2 ரவுடிகளும் ஓடி ஒளிந்து கொண்டனர். அப்போது அவர்களது கூட்டாளிகள் 8 பேரும் அங்கு வந்து வார்டன்களை மிரட்டியுள்ளனர். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. ரவுடிகள் தாக்கியதில் ஊமைக்காயம் அடைந்த வார்டன் கார்த்திக்கை சிறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது.

இதையடுத்து சிறையில் அமர்நாத் கோஷ்டியை சேர்ந்த 10 பேரையும் சிறை அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். இது குறித்து ஜெயிலர் மதிவாணன், அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார், ரவுடிகள் 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Coimbatore ,Kundas ,Salem , Salem Jail, Warden, Kundas Prisoner, Case,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்