×

விலைவாசியை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஒன்றிய அரசு மீது முத்தரசன் காட்டம்

விருதுநகர்: விருதுநகரில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி:
இலங்கையில் விலைவாசி உயர்வை குறைக்க தவறிய ராஜபக்ச அரசை கண்டித்து 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இதேபோன்ற போராட்டம் இந்தியாவில் நடக்க வெகுநாட்கள் ஆகாது. அந்த அளவிற்கு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்து வருகிறது. 800 வகையான மருந்து, மாத்திரை விலை உயர்ந்துள்ளது. நெடுஞ்சாலை சுங்க கட்டணத்தை அதிகரித்துள்ளனர். விலைவாசி உயர்வால் கடந்த மாதத்தை விட கூடுதலாக ரூ.2 ஆயிரம் செலவிட வேண்டிய நெருக்கடிக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். விலைவாசியை குறைக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 விலைவாசி உயர்வை திசை திருப்ப மதங்களின் பெயரால் நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இது நாட்டை சீர்குலைக்கும் முயற்சியாகும். உள்துறை அமைச்சர் மக்கள் இந்தியில் பேச உத்தரவு போடுவதை ஏற்க முடியாது. உள்துறை அமைச்சக சுற்றறிக்கை முற்றிலும் இந்தியில் அனுப்புகின்றனர். நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், சட்டங்கள், அனுகுமுறைகள் உள்ளது. வரும் ஆக. 6, 7, 8, 9 தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. ஆக. 9ல் ‘‘வெள்ளையனே வெளியேறு’’ நாளில் ‘‘மோடி அரசே வெளியேறு’’ என்கிற முழக்கத்துடன் தொண்டர்கள் அணிவகுப்பு நடைபெறும் என்றார்.


Tags : Mutharasan ,Union Government , Price, action, Union Government, Mutharasan
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...