×

எல்லா வளங்களையும் அழிக்கும் ரஷ்யா புதிய கட்டத்தில் உக்ரைன் போர்: மரியுபோலில் உடனே சரணடைய கெடு; போலந்து எல்லையில் குண்டு வீச்சு

கீவ்: உக்ரைன் போரில் புதிய கட்டத்தை தொடங்கி இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதில், உக்ரைனின் அனைத்து வளங்களையும் அழிக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா, மரியுபோலில் சண்டை போடும் உக்ரைன் வீரர்கள் அனைவரும் உடனே சரணடைய கெடு விதித்துள்ளது. உக்ரைனுக்கு ஆயுத சப்ளை செய்யும் நேட்டோ நாடுகளை அச்சுறுத்த போலந்து எல்லையிலும் குண்டு வீசி 7 பேரை கொன்றுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கிட்டதட்ட 2 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இத்தனை நாள் பதுங்கி அடித்த உக்ரைன், மேற்கு நாடுகள் ஆயுத உதவியால் ரஷ்யாவுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. மேலும், கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் மிகப்பெரிய போர் கப்பலை உக்ரைன் அழித்ததால், ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைனில் முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் ஏவுகணை தாக்குதல் மற்றும் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் மரியுபோலில் உள்ள மிகப்பெரிய அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையை ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இங்கு எதிர் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால், உயிர் பிச்சை அளிப்பதாக ரஷ்யா கெடு விதித்தது. ஆனால், ‘எங்களுடைய பகுதியை விட்டு தர மட்டோம். மரியுபோலை மீட்பது எப்படி என்று எங்களுக்கு தெரியும்’ என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதனால், அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி உள்ள  ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் 2,500 உக்ரைன் வீரர்கள் மீது ரஷ்யா குண்டு  வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஒட்டு மொத்தமாக சிதைந்து கிடக்கும்  மரியுபோல் நகரத்தில் மிச்சம் இருப்பது இந்த ஆலை மட்டுமே. இதை கைப்பற்றினால்  ஒட்டுமொத்தமாக மரியுபோலை கைப்பற்றி விடலாம் என்று எண்ணி, அங்கு உள்ள  உக்ரைன் வீரர்களை உடனடியாக சரணடைய ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள தொழில்துறை மையப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று முழு அளவிலான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி போரின் புதிய கட்டத்தை ரஷ்யா தொடங்கி உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கிழக்கு உக்ரைன் டான்பாஸ் பிராந்தியம், மரியுபோல், மேற்கு உக்ரைனில் உள்ள லிலிவ் மற்றும் தெற்கு உக்ரைன் என அனைத்து பகுதிகளிலும் ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிரெமின்னா மற்றும் மற்றொரு நகரத்தில் சாலைகளில் கடும் சண்டை நடந்து வருகிறது. பீரங்கித் தாக்குதலால் ஏழு குடியிருப்பு கட்டிடங்கள் தீ பிடித்து எரிந்தது. உக்ரைனின் ஒலிம்பிக் குழு பயிற்சி பெறும் விளையாட்டு வளாகமும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்ய படைகள் பெரும்பாலான பகுதிகளை சுடுகாடாக்கும் எண்ணத்தில் கட்டிடங்களை தரைமட்டமாகி வருகின்றன. இதனால், மக்கள் வெளியே முடியாமல் செத்து மடிகின்றனர்.

போலந்து எல்லைக்கு அருகில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த பகுதி வழியாகதான் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கின. இதனால், போலந்தை அச்சுறுத்தும் வகையில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதேபோல், பல்வேறு நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கு லிலிவ்வில் தங்குமிடம் அளித்த ஒரு ஓட்டலின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.  

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் கூறுகையில், ‘‘3 வெடிமருந்து கிடங்குகள், ஒரு எரிபொருள் கிடங்கு, 5 கட்டளைத் தலைமையகம், உக்ரைன் வீரர்கள், ராணுவ வாகனங்களின் குழுக்கள் உட்பட கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் உள்ள 20க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மூலம் ரஷ்யா அழித்துள்ளது. கிழக்கில் போபாஸ்னா மற்றும் கிராமடோர்ஸ்க் மற்றும்  மத்திய உக்ரைனில் உள்ள யாம்பில் அருகே உள்ள நான்கு வெடிமருந்து  கிடங்குகள் மற்றும் 3 உக்ரைன் படை குழுக்களை அழிக்க ஏவுகணை வீசப்பட்டது. 315 உக்ரைன் இலக்குகளை தாக்க ராணுவம் பீரங்கிகளைப்  பயன்படுத்தியது. போர் விமானம், ராணுவ உபகரணங்களை குறிவைத்து 108 தாக்குதல்களை நடத்தி உள்ளது’’ என்று கூறினார்.

விட மாட்டோம்
உக்ரைன்  அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டு வீடியோவில், ‘‘ரஷ்ய படைகள் டான்பாஸ் போரைத் தொடங்கிவிட்டன. முழு ரஷ்ய ராணுவத்தின்  குறிப்பிடத்தக்க பகுதியும் இப்போது தாக்குதலில் குவிந்துள்ளது. டான்பாஸ்  பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் படைகளுக்கு எதிராக  எட்டு ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றனர். தலைநகர் கீவ்வை கைப்பற்றும்  முயற்சி தோல்வியடைந்ததால், டான்பாஸைக் கைப்பற்றுவதே போரின் முக்கிய இலக்காக  ரஷ்யா அறிவித்துள்ளது.

ஒரு உச்சக்கட்டப் போராக இருக்கக்கூடிய கிழக்கில் அதன் தரைப்படைகளை மீண்டும் ஒருங்கிணைத்து வலுப்படுத்தத் தொடங்கி உள்ளது. எவ்வளவு ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டாலும்,  நாங்கள் போராடுவோம். நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்வோம்’ என்றார்.

ரூ.38 லட்சம் கோடி சேதம்
*ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனின் மக்கள் குடியிருப்புகள், தனி நபர் சொத்துகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டால் ரூ.38,13,120 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
* ரூ.7,62,642 கோடி (30% மேல்) மதிப்பிலான உக்ரைனின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளது.
* ரஷ்ய படைகளின் தீவிர தாக்குதலால் கெர்சன், கிரிமியா நகரங்களை தவிர உக்ரைன் முழுவதும் வான்வழி ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
* உக்ரைன் மீது படையெடுப்பை தொடர்ந்து, ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. இதனால், ஐரோப்பா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி கடுமையாக குறைத்து, இந்தியாவிடம் அதிகளவில் மருத்துவ உபகரணங்களை ரஷ்யா கோரி உள்ளது.

Tags : Russia ,Ukraine ,Mariupol ,Polish , Destroying resources Russia, Ukraine war, Polish border, bombing
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...