×

டெல்லி அணியில் அதிகரித்த கொரோனா பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி மும்பைக்கு மாற்றம்

மும்பை:  டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் 5 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்,  அந்த அணி  பஞ்சாப்புடன் இன்று மோத உள்ள ஆட்டம் புனேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட்  பேட்ரிக் ஃபார்ஹர்டுக்கு தொற்று இருப்பது ஏப்.15ம் தேதி உறுதியானது. மற்றவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், யாருக்கும் தொற்று இல்லை என முடிவு வந்ததால், ஏப்.16ல் மும்பையில் நடந்த பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி ஆடியது.

அந்த அணியின் அடுத்த ஆட்டம்  இன்று புனேவில் நடப்பதாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், மிட்செல் மார்ஷுக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் புனே பயணம்  கைவிடப்பட்டு, வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆர்டி-பிசிஆர் சோதனையில் அணி ஊழியர்களான, ஸ்போர்ட்ஸ் மசாஜ் நிபுணர்  சேத்தன்குமார், மருத்துவர் அபிஜித் சால்வி, சமூக ஊடக மேலாளர்  ஆகாஷ் மானே ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

மொத்தம் 5 பேருக்கு தொற்று உறுதியானதால் இன்றைய ஆட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப பஞ்சாப் அணியும் புனே செல்லாமல் நேற்று காலை மும்பையிலேயே பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், புனேவில் நடைபெறுவதாக இருந்த   டெல்லி - பஞ்சாப் லீக் ஆட்டம் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்த பிசிசிஐ, ‘புனே பயணத்தின் மூலம் பரவலை அதிகரிப்பதை தவிர்க்கவே இந்த முடிவு’ என்றும் கூறியுள்ளது.

Tags : Delhi Corona Punjab ,Mumbai , Delhi team, Corona, Punjab team, Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!