உலக கோப்பை தொடருக்கு கார்த்திக்கை சேர்க்கலாம்...கவாஸ்கர் ஆதரவு

மும்பை: இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20  உலக கோப்பைக்கான இந்திய அணியில்,  ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் தினேஷ் கார்த்திக்கை சேர்க்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால்  கார்த்திக் (36)  கவனம் ஈர்த்து வருகிறார். ஆர்சிபி அணிக்காக பரபரப்பான கடைசி கட்ட ஓவர்களில் களமிறங்கி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். பஞ்சாப்புக்கு எதிராக  32* (14 பந்து), கொல்கத்தாவுக்கு எதிராக 14* (7 பந்து),  ராஜஸ்தானுக்கு எதிராக 44* (23 பந்து), மும்பைக்கு எதிராக 7*(2 பந்து),  சென்னைக்கு எதிராக 34 (14 பந்து), டெல்லிக்கு எதிராக 66* ரன் (34 பந்து) விளாசியுள்ளார்.

அவரது சராசரி 197, ஸ்டிரைக் ரேட் 209.7 ஆக உள்ளது. இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசையை கார்த்திக் வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ‘டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற விரும்புவதாக தினேஷ்  கூறியுள்ளார். நான் சொல்வது என்னவென்றால், அவரது வயதை பார்க்காதீர்கள். அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பாருங்கள்.  இந்திய அணியில் 6 அல்லது 7வது இடத்தில் அவரை இறக்கினால் நீங்கள் எதிர்பார்க்கும் வேலையை அவர்  செய்வார்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: