×

டு பிளெஸ்ஸி அதிரடியில் ஆர்சிபி ரன் குவிப்பு

மும்பை: லக்னோ சூப்பர் ஜயன்ட் அணியுடனான லீக் ஆட்டத்தில், கேப்டன் டு பிளெஸ்ஸியின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசியது. அனுஜ் ராவத், டு பிளெஸ்ஸி இருவரும் ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். ராவத் 4 ரன் எடுத்து துஷ்மந்த சமீரா வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கோஹ்லி சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, ஆர்சிபி 1 ஓவரில் 7 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. இந்த நிலையில், டு பிளெஸ்ஸி - கிளென் மேக்ஸ்வெல் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தனர். மேக்ஸ்வெல் 23 ரன் (11 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் ஹோல்டர் வசம் பிடிபட்டார். சுயாஷ் 10 ரன்னில் பெவிலியன் திரும்ப, டு பிளெஸ்ஸி - ஷாபாஸ் அகமது ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 70 ரன் சேர்த்தது.

டு பிளெஸ்ஸி 40 பந்தில் அரை சதம் அடித்தார். ஷாபாஸ் 26 ரன் எடுத்து ரன் அவுட்டாக, டு பிளெஸ்ஸியுடன் கார்த்திக் இணைந்தார். தனது 100வது ஐபிஎல் இன்னிங்சில் விளையாடிய டு பிளெஸ்ஸி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 96 ரன் (64 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக விக்கெட்டை இழந்தார். தனது முந்தைய அதிகபட்ச ஸ்கோரை எட்டிய அவர், ஐபிஎல் தொடரில் முதல் சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் நழுவவிட்டார்.

ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. கார்த்திக் 13 ரன், ஹர்ஷல் படேல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் சமீரா, ஹோல்டர் தலா 2, க்ருணால் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது. 


Tags : Du Plessis, RCB, Run
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை...