ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடியிடம் விசாரணை? ஆறுமுகசாமி ஆணைய அதிகாரிகள் தகவல்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஆணையத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் அப்போலோ தரப்பு வக்கீல் மட்டும் ஏற்கனவே வாக்குமூலம் அளித்த டாக்டர்களின் சாட்சியத்தை தெளிவுபடுத்தும் வகையில் 11 டாக்டர்களிடம் மட்டும் மறு விசாரணை நடத்த கோரினார். இதனை ஆணையம் ஏற்றுக் கொண்டது. அதன்படி அப்போலோ மருத்துவர்கள் 7 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று அப்போலோ மருத்துவர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், டொமினிக் சேவியோ, ஸ்ரீதர், ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வாக்குமூலம் அளித்தனர். இதற்கிடையே 2017ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து அரசாணை பிறப்பித்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி, ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு அளித்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது புகழேந்தி நேரில் ஆஜராகி எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த கோருவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது நீதிபதி ஆறுமுகசாமி ஏற்கனவே ராமமோகனராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் விசாரணை நடத்தினால் தேவையில்லாத காலதாமதம் ஏற்படும் என்றார். அதன் பின் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். விரைவில் இந்த விவகாரத்தில் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரிகிறது. அதேநேரத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து புகழேந்தி தனது தரப்பு விளக்கத்தை வாக்குமூலமாக அளிக்க 26ம் தேதி ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: