தொழில்துறையின் பெயர் மாற்றம்: கிருஷ்ணகிரியில் ரூ.1800 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா; சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

பேரவையில் நேற்று தொழில்துறை மானியக்கோரிக்கையின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு:

* தமிழகத்தில் தொழில்துறை இனி, ‘தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

*தொழில்துறையின் கீழ் மாநில அளவில் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் புதிதாக உருவாக்கப்படும். சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த ‘எத்தனால் கொள்கை 2022’ வெளியிடப்படும்.  தமிழ்நாடு தொழில் கொள்கை 2021ன் கீழ் வழங்கப்படும் நிலையான ஊக்க சலுகைகளுடன் கூடுதலாக தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி துறைக்கான சிறப்பு திட்டம் ஒன்று வெளியிடப்படும்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா ஒன்று ரூ.1800 கோடி திட்ட மதிப்பீட்டில் 3000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். இதன்மூலம் ரூ.21 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 16,800 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கும்.

ஸ்ரீ பெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் உணவகம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுமார் 250 ஏக்கர் பரப்பில் பல்துறை தொழிற்பூங்கா அமைக்கப்படும்.  தமிழ்நாட்டில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் கோவையில் அமைக்கப்படும். மாநிலத்தில் பல விமானங்களை இயக்க பயிற்சி தரும் நிறுவனங்களை அமைக்க டிட்கோ துணை புரியும்.

* புதிய ஏர்போர்ட்

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ் உச்சரிப்புக்கு விருது

* மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி,மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.5லட்சம் வீதம் 100 கல்லூரிகளுக்கு ரூ.5 கோடியும், இவ்வாண்டு போட்டிகள் நடத்திட ரூ.36 லட்சமும் என மொத்தம் ரூ.5.36 கோடி வழங்கப்படும்.

* தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும். இதற்கென ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

Related Stories: