×

சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயில் வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் சுவாமி கோயில்  வருஷாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் நடந்து வருகிறது. அதன்படி 12ம் ஆண்டு வருஷாபிஷேகம் நேற்று (ஏப்.18) கோலாகலமாக தொடங்கியது.

இதையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், கஜபூஜை, பூர்ணா ஹூதி, தீபாராதனை, சௌபாக்கிய விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், வேதிகார்ச்சனை, அக்னிகாரியம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து இன்று (ஏப்.19) காலை வருஷாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 6:30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக வேள்வி பூர்ணாஹுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. 8 மணிக்கு மேல் சித்தி விநாயகர், சங்கரலிங்க பெருமாள், சங்கர நாராயணர் சுவாமி, கோமதி அம்பாளுக்கு வருஷாபிஷேக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத சண்முகர்க்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.

இதில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி பகல் 12.30 மணிக்கு கோயில் திருமண மண்டபத்தில் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு மேல் பஞ்சமூர்த்தி வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை வருஷாபிஷேக கட்டளைதாரர்கள் சங்கரன்கோவில் ஏ.வி.கே., கல்வி குழும சேர்மன் அய்யாதுரைபாண்டியன், துணைச் சேர்மன் அல்லிராணி அய்யாத்துரைபாண்டியன் செய்து இருந்தனர்.

Tags : Sankara Narayanaswamy Temple ,Sankaranko , Sankarankoil Sankara Narayanaswamy Temple Varushabishekam: Mass participation of devotees
× RELATED சங்கரன்கோவிலில் ஓடைக்குள் கார் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு