×

ஓம் சக்தி கோஷம் விண்ணதிர சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் சக்தி, மகாசக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர்.சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 தினமும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (19ம் தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதலே சமயபுரத்தில் குவிந்தனர்.

கோயிலில் உள்பிரகாரம், கிழக்கு வாசல், மேற்கு வாசல்,  தெற்கு வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலங்கார விளக்குகளும்,  மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளதால் சமயபுரம் மின்னொளியில் ஜொலித்தது. இந்நிலையில்  இன்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ”ஓம் சக்தி, மகா சக்தி” கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக திருச்சி, துறையூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் உள்ள சக்தி நகர், பழைய பெட்ரோல் விற்பனை நிலையம், ஆட்டுச்சந்தை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வெளியூரிலிருந்து வரும் பஸ்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் திருச்சி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. நாளை அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்திலும், 21ம் தேதி  முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார். 22ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 26ம் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.


Tags : Om Sakthi Slogan ,Vinnathira ,Samayapuram ,Mariamman Temple , Om Sakthi Slogan Vinnathira Samayapuram Mariamman Temple Chithirai Therottam Kolagalam: Darshan by a large number of devotees
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...