×

பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்; புதுவையில் கஞ்சா புகைத்தாலும் கைது: ஐஜி சந்திரன் எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறை தலைவர் சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுவையில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடம் கஞ்சா பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு எஸ்பி தலைமையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்குநாள் கஞ்சா வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை கஞ்சா விற்பனை செய்பவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

இனிமேல் கஞ்சா வாங்குவோரும் கைது செய்யப்படுவார்கள், கஞ்சா வைத்திருத்தாலோ, குறைவான அளவு அதாவது 5 கிராம், பத்து கிராம் அளவுக்கு வைத்திருந்தாலும், கஞ்சா புகைத்தாலும், அதனை எந்த வடிவில் பயன்படுத்தினாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள், அவர்களின் நண்பர்கள் யார், யார் யாருடன் பழகுகிறார்கள் என்பதை எல்லாம் கண்காணிக்க வேண்டும். நல்ல சமுதாயம் உருவாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

ஒரு பள்ளி மாணவன் கஞ்சா வைத்திருந்து கைது செய்யப்பட்டால் அவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுவான். கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும். எனவே இதனை எல்லாம் தடுக்கும் வகையில் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். புதுச்சேரியை போதைப்பொருள் அற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பள்ளி, கல்லூரி அளவில் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த உள்ளோம்.

இதில் ஆசிரியர்கள், நல்ல பழக்கவழக்கம் உள்ள மாணவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். இந்தக்குழு பள்ளிகளில் யார், யார் போதைப்பொருள் உபயோகப்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்கும். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கஞ்சா விற்பனை, புழக்கம் குறித்து தகவல்களை புதுச்சேரி காவல்துறையின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறைக்கு 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவர்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். அதேபோல் காவல்துறையின் பிரத்யேக வாட்ஸ்அப் எண் 9489205039 என்ற எண்ணுக்கு தகவல்களை அனுப்பலாம்.

இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை விரைந்து சென்று சம்பந்தப் பட்டவர்களை கைது செய்யும். 2016ல் புதுச்சேரியில் 3 வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2021ம் ஆண்டு 129 வழக்குகளாக அதிகரித்துள்ளது. கஞ்சா வழக்கில் தற்போது 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கஞ்சா வைத்திருப்போர் மீது குண்டர் சட்டம் பயன்படுத்தப்படும். மேலும் 550 கிராம் என்ற அளவில் இருந்த கஞ்சா பயன்பாடு தற்போது 109 கிலோவாக அதிகரித்துள்ளது.

இவற்றை காவல்துறை பறிமுதல் செய்ய அடிப்படையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது. கஞ்சா வழக்குகளில் குற்றவாளிக்கு 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும். இதே நபர் வேறுவகை போதை பொருட்களான பிரவுன்சுகர், ஹெராயின், எல்எஸ்டி போன்ற வேதிப்பொருள் சார்ந்த போதைப்பொருட்கள் வைத்திருந்தால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். ஆரம்பத்தில் கஞ்சா பரிசோதனைக்காக ஐதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்தது.

தற்போது கிருமாம்பாக்கத்தில் உள்ள காவல்துறை தடயவியல் சோதனை மையம் ஏற்படுத்தப்பட்டு இங்கேயே பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுப்பதற்காகவும் 2 தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் முகநூல், வாட்ஸ் அப், ஏடிஎம் பின் நம்பர், கார்டு நம்பர், கார்டு சிவிவி, ஓடிபி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என காவர்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக இளம்பெண்கள் முன்பின் தெரியாதவர்களிடம் திடீரென நட்பு ஏற்படுத்திக்கொண்டு தங்கள் புகைப்படங்களை ஷேர் செய்வது, குடும்ப விவரங்களை தெரிவிப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : New York ,IG Moon , Parents need to monitor their children; Arrested for smoking cannabis in Puduvai: IG Chandran warns
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்