×

பட்டினப்பாக்கம் இணைப்பு சாலையில் கார் விபத்து: உயர் நீதிமன்ற நீதிபதி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பட்டினப்பாக்கம் இணைப்பு சாலையில் முன்னால் சென்ற கார் மீது நீதிபதி சென்ற கார் மோதிய விபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பசுமை வழிசாலையில் நீதிபதி குடியிருப்புகள் உள்ளது. இன்று காலை உயர் நீதிமன்றத்திற்கு செல்ல நீதிபதி மாலா தனது காரில் புறப்பட்டு சென்றார். காரை ஓட்டுனர் இயக்கினார். கார் பட்டினப்பாக்கம் இணைப்பு சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் இடையே உள்ள வேகத்தடையில் திடீரென முன்னால் சென்ற கார் ஒன்று நின்றது. எதிர்பாராத விதமாக பின்னால் வந்த நீதிபதியின் கார் மோதியது. நீதிபதி மாலா அமர்ந்து இருந்த பகுதியில் பலத்த சேதமடைந்தது.

நீதிபதி மாலா லேசான காயமடைந்தார். அங்கு இருந்த பொதுமக்கள் நீதிபதியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டது. அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்துக்குள்ளான நீதிபதியின் காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னால் சென்ற கார் ஓட்டுனரிடமும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பட்டினப்பாக்கம் பகுதியில் பதற்றம் நிலவியது.

Tags : Pattinapakkam , Car accident on Pattinapakkam link road: High Court judge admitted to hospital with minor injuries
× RELATED மெரினா கடலில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி