பாஜக ஆட்சிக்கு எதிராக வியூகங்களை வகுக்க பிரியங்கா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் காங்கிரசில் பரபரப்பு

புதுடெல்லி: ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிராக வியூகங்களை வகுப்பது தொடர்பாக இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர்களை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். அப்போது பிரியங்கா காந்தியும் உடனிருந்தார். காங்கிரசின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து அக்கட்சியின் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளுதல், ஆளும் பாஜகவுக்கு எதிராக வியூகங்களை வகுத்தல், இந்தாண்டு இறுதியில் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச தேர்தல், அடுத்தாண்டு சில மாநிலங்களில் நடக்கவிருக்கும் பேரவை தேர்தல் குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக நேற்று இரண்டாவது முறையாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் பிரசாந்த் கிஷோர் - காங்கிரஸ் மூத்த தலைவர்களின் சந்திப்பு நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘பிரியங்கா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரசாந்த் கிஷோரிடம் சில முன்மொழிவுகள் பெறப்பட்டன. இந்த சந்திப்பின்போது எதிர்க்கட்சிகளை எவ்வாறு ஒன்றிணைப்பது என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. காங்கிரசின் தகவல் தொடர்புத் துறை, சமூக ஊடக அமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் குறித்து பிரசாந்த் கிஷோர் எடுத்து கூறினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், அம்பிகா சோனி, ராஜ்யசபா காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் இருந்தனர்’ என்றார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது சந்திப்புக் கூட்டத்தில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் வியூகம் குறித்து பிரசாந்த் கிஷோர் விரிவான விளக்கத்தை அளித்திருந்தார். அப்போது 370 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள இடங்களில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே. மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் பிரசாந்த் கிஷோரையும் கட்சியில் சேருமாறு காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. அவர் காங்கிரசில் சேருவாரா? அல்லது ஆலோசனைகளை வழங்குவாரா? என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.

சோனியாவை சந்தித்த மெகபூபா

மக்கள் ஜனநாயக முன்னணி (பிடிபி) தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து சோனியா காந்தியுடன் அவர் விவாதித்தார். சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா முப்தி, ‘காங்கிரசால் மட்டுமே நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்’ என்றார்.

Related Stories: