மீஞ்சூர் அருகே மாயமான 2 சிறுமிகள் 5 மணி நேரத்தில் மீட்பு

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த நாலூர் பத்மாவதி நகரை சேர்ந்தவர் உமா மகேஷ் மகள் தர்ஷினி (13). அதே பகுதியை சேர்ந்தவர் ஜூலி தினகரன் மகள் நகசீதா. தோழிகளான இவர்கள், நேற்று மாலை மீஞ்சூர் பஜாருக்கு சென்றனர். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர், அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து, மீஞ்சூர் போலீசில் புகார் செய்தனர். ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், துணை ஆணையர் மகேஷ்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் முருகேசன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், எஸ்ஐ வேலுமணி,

காவலர்கள் மணிவண்ணன், தமிழரசன் ஆகியோர் தலைமையில் தீவிரமாக தேடினர். அப்போது, எண்ணூர் உலகநாதபுரம் பகுதியில் உள்ள அவர்களது தோழி வீட்டில் தர்ஷினியும், நகசீதாவும் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், தோழியை பார்க்க சென்றதாக இருவரும் கூறினர். இதையடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். புகார் செய்த 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: