×

நாகர்கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய இன்ஸ்பெக்டர் கண்மணி திடீர் இடமாற்றம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய இன்ஸ்பெக்டர் கண்மணி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாண்டியன். நாகர்கோவில் கோர்ட்டில் குற்றவியல் உதவி இயக்குனராக உள்ளார். அவரது மனைவி கண்மணி (52). நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கணவன், மனைவி 2 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர் பால் தலைமையில் போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது தோழி அமுதா ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

இந்த சோதனையில் இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டில் இருந்து ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கமும், வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையில் ரூ.91 லட்சத்துக்கான ஆவணம் மற்றும் 91 பவுன் தங்க நகைகள், சில சொத்து பத்திரங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். மேலும் தோழி அமுதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.23 லட்சத்துக்கான கடன் பத்திரங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து, கடன் பத்திரங்கள், பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை ஒப்பிடுகையில் இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 171.78 சதவீதம் வரை சொத்து சேர்த்துள்ளதாக கண்டறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் கண்மணி, கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை அனைத்தும் தற்போது நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டது. நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விடுமுறையில் இருந்த இன்ஸ்பெக்டர் கண்மணி பின்னர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பிறப்பித்துள்ளார்.


Tags : Inspector ,Kanmani ,Anti-Corruption Police ,Nagercoil , Inspector Kanmani abruptly transferred to Anti-Corruption Police in Nagercoil
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது