×

ஊட்டி மலை ரயிலில் பயணிக்க அலைமோதும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகிறார்கள். அவர்கள் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுவதால் நேற்று கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். யுெனஸ்கோ அமைப்பு நீலகிரி மலை ரயிலை பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

இந்த மலை ரயிலில் பயணிக்க பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.குறிப்பாக கோடை சீசன், 2வது சீசன் காலக்கட்டங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரக் கூடிய சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து ஊட்டி மலை ரயிலில் பயணித்து இயற்கை காட்சிகளை பார்வையிட்டு மகிழ்வார்கள். ஊட்டி - குன்னூர் - மேட்டுபாளையம் இடையேயும், குன்னூர் - ஊட்டி இடையேயும் தினமும் மலை ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மலை ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது. ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் கோடை சீசனின் போது ஊட்டி - கேத்தி இடையேயும், குன்னூர் - ரன்னிமேடு இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

தற்போது சீசன் துவங்கியுள்ள நிலையில் இன்னும் சிறப்பு ரயில் இயக்கம் குறித்து சேலம் ரயில்வே கோட்டம் அறிவிக்கவில்லை. எனவே விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Ooty Mountain Railway , Tourists roam the Ooty Mountain Railway
× RELATED மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது