கோடை மழையால் மேட்டுப்பாளையம் வனப்பகுதி பசுமையானது

மேட்டுப்பாளையம்: வறட்சியால் வறண்டு போன மேட்டுப்பாளையம் வனப்பகுதி கோடை மழையால் பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் மதுக்கரை வரை மேற்கு தொடர்ச்சி மலை வனவிலங்குகள் சரணாலயமாக உள்ளது. இந்த மலையை ஒட்டி அமைந்துள்ள புதர் காடுகள் இயற்கையாகவே அமைந்துள்ளது. வனவிலங்குகள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதால் இங்கு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை மற்றும் புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இதில், குறிப்பாக மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனப்பகுதியில் பவானி ஆறு ஓடுவதாலும், புதர் காடுகளின் அடர்த்தி குறையாமல் இருப்பதாலும் தென்னிந்திய யானைகளின் இடப்பெயர்ச்சிக்கு ஏற்ற சூழல் உள்ளதால் டிசம்பர் முதல் ஜூன் மாதம் வரை இப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் புதர் காடுகளில் உள்ள இயற்கையான நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறும் சூழல் உருவானது. இந்நிலையில், வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் வனப்பகுதியில் அமைத்துள்ள செயற்கை தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் அவ்வப்போது கோடை மழை பெய்தது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் வனப்பகுதிகள் மீண்டும் பசுமைக்கு திரும்பியது. இதனால், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ள்னர்.

இருப்பினும், வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதற்காக, மேட்டுப்பாளையத்தில் 18 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் சிறுமுகை, காரமடை,பெரியநாயக்கன்பாளையம், ஆனைகட்டி உள்ளிட்ட வனப் பகுதிகளிலும் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அங்கு லாரிகள் மூலமாகவும், ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தொட்டிகளில் நிரப்பி வனவிலங்குகளுக்கு கோடை காலம் முடியும் வரை குடிநீர் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: